விருப்பாட்சி, பெருமாள்குளத்தில் மண் அள்ளுவதால் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் - நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்


விருப்பாட்சி, பெருமாள்குளத்தில் மண் அள்ளுவதால் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் - நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 May 2019 4:30 AM IST (Updated: 21 May 2019 1:16 AM IST)
t-max-icont-min-icon

விருப்பாட்சி பெருமாள்குளத்தில் சட்டவிரோதமாக மண் சிலர் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

சத்திரப்பட்டி,

ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாட்சியில் பெருமாள்குளம் உள்ளது. 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்துக்கு பரப்பலாறு அணை மற்றும் தலையூத்து அருவியில் இருந்து வாய்க்கால் மூலம் தண்ணீர் வருகிறது. இந்த குளத்தின் மூலம் சுமார் 250 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அங்கு காய்கறி, மக்காச்சோளம் மற்றும் தென்னை ஆகியவற்றை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் பெருமாள்குளம் நிரம்பினால் பெரியகரட்டுப்பட்டி, சின்னகரட்டுப்பட்டி, பெரியகோட்டை, சாமியார்புதூர், விருப்பாட்சி, ரெட்டியப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

இதைக்கொண்டு அப்பகுதி மக்களுக்கு ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் எடுத்து வினியோகிக்கப்படுகிறது. எனவே மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் பெருமாள்குளம் உள்ளது. இந்நிலையில் பெருமாள்குளத்தில் கடந்த சில நாட்களாகவே சட்டவிரோதமாக மண் அள்ளப்பட்டு வருகிறது. இதனால் குளத்தின் வளம் பறிபோகும் நிலை உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘பெருமாள்குளத்தில் இரவு, பகல் பாராது 24 மணி நேரமும் பொக்லைன் எந்திரம் மூலம் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் மண் அள்ளி வருகின்றனர். சுமார் 15 அடி ஆழத்துக்கு குளத்தில் சீரற்ற முறையில் மண் அள்ளப்படுகிறது. இதனால் ஆங்காங்கே ராட்சத பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கேட்டால் அனுமதி பெற்று மண் அள்ளுவதாக கூறுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தால் அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை. மண் அள்ளுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காவிடில் விருப்பாட்சி பகுதியில் விவசாயம் கேள்விக்குறியாகும். மேலும் ஏற்கனவே சாகுபடி செய்துள்ள தென்னை மரங்களும் கருகும் அபாயம் உருவாகும். எனவே சட்டவிரோதமாக மண் அள்ளுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Next Story