நெல்லையில் 3,464 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


நெல்லையில் 3,464 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 21 May 2019 4:00 AM IST (Updated: 21 May 2019 2:07 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் 3 ஆயிரத்து 464 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

நெல்லை,

நெல்லையில் 3 ஆயிரத்து 464 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, ரூ.4½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து நெல்லை மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெல்லை மாநகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் சிறு மற்றும் குறு நிறுவனங்களை கண்காணிப்பதற்கு 8 கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவினர் தினசரி சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த கண்காணிப்பு குழுவினர் நெல்லை மாநகராட்சி பகுதிகளில் இயங்கும் கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், பூக்கடைகள், இறைச்சி கடைகள், பஸ் நிலையங்கள் ஆகியவற்றில் உள்ள கடைகள் மற்றும் பிற பொது இடங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை கண்டறியும் சோதனையில் ஈடுபட்டனர். கடந்த 1-ந்தேதி முதல் நேற்று வரையிலும் மொத்தம் 35 ஆயிரத்து 518 கடைகளில் சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனைகளில் 3 ஆயிரத்து 464 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக மொத்தம் ரூ.4 லட்சத்து 49 ஆயிரத்து 300 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த சோதனை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. நெல்லை மாநகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது தெரிய வந்தால், அவற்றை பறிமுதல் செய்து அபராதம் விதிப்பதோடு, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story