திருச்சி ரெயில்வே தண்டவாளம் அருகே தொழிலாளி மயங்கி விழுந்து சாவு


திருச்சி ரெயில்வே தண்டவாளம் அருகே தொழிலாளி மயங்கி விழுந்து சாவு
x
தினத்தந்தி 20 May 2019 11:00 PM GMT (Updated: 20 May 2019 8:48 PM GMT)

திருச்சியில் ரெயில்வே தண்டவாளம் அருகே தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தார். குட்ஷெட் பாலத்தில் இருந்து அவர் குதித்து விட்டதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

திருச்சி கல்லுக்குழியை சேர்ந்தவர் நஞ்சுண்டான் (வயது 57). இவர், உறையூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை வீட்டில் இருந்து வேலைக்கு சென்றார். திருச்சி குட்ஷெட் மேம்பாலத்தின் அடியில் ரெயில்வே தண்டவாளம் அருகே சென்றபோது, திடீரென மயங்கி விழுந்தார். அந்த வழியாக சென்ற சிலர் இதை பார்த்து மதுபோதையில் யாரோ படுத்து கிடப்பதாக நினைத்து சென்று விட்டனர்.

இந்நிலையில் பகல் 12 மணி அளவில் குட்ஷெட் மேம்பாலத்தில் இருந்து ஒருவர் ரெயில் மீது குதித்துவிட்டதாக தகவல் பரவியது. உடனே அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ஆங்காங்கே தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு பாலத்தின் மீது நின்று கீழே தண்டவாளத்தில் எட்டி பார்க்க தொடங்கினர். இதனால் குட்ஷெட் பாலத்தில் கூட்டம் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று டாக்டர்களை வரவழைத்து நஞ்சுண்டானை பரிசோதனை செய்தனர். அப்போது அவர் இறந்து விட்டது தெரியவந்தது. காலையில் வேலைக்கு செல்வதற்காக அந்த வழியாக நடந்து சென்றபோது, அவருக்கு திடீரென இருதய அடைப்பு ஏற்பட்டு இறந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கு சென்று அவரது உடலை பார்த்து கண்ணீர்விட்டு கதறி அழுதனர். பின்னர், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story