திருவேங்கடம் அருகே 2 கடைகளில் தீ விபத்து


திருவேங்கடம் அருகே 2 கடைகளில் தீ விபத்து
x
தினத்தந்தி 23 May 2019 10:15 PM GMT (Updated: 23 May 2019 9:58 PM GMT)

திருவேங்கடம் அருகே 2 கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது.

திருவேங்கடம்,

நெல்லை மாவட்டம் திருவேங்கடத்தை அடுத்த கலிங்கப்பட்டி-மகாதேவர் சாலையில் டீக்கடை நடத்தி வருபவர் தவிட்டுராஜ் (வயது 43). இவரது கடையில் நேற்று அதிகாலையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அப்போது பலத்த காற்று வீசியதால், டீக்கடையின் அருகில் உள்ள சலவை கடைக்கும் தீ பரவியது. இதனால் 2 கடைகளிலும் தீ கொழுந்து விட்டு எரிந்தது.

உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க போராடினர்.

இதுகுறித்து சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சியடித்து, சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் அருகில் உள்ள வீடுகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

தீ விபத்தில் டீக்கடையில் இருந்த மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்களும், சலவை கடையில் இருந்த தள்ளுவண்டி, பட்டு சேலைகள், சட்டைகள் போன்றவையும் தீயில் எரிந்து சேதம் அடைந்தன.

தீ விபத்தில் சேதம் அடைந்த கடைகளை கிராம நிர்வாக அலுவலர் அய்யனார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தீ விபத்துக்கான காரணம் குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story