ஆவடி அருகே போலி நகையை கொடுத்து மோசடி செய்ய முயன்ற 2 பெண்கள் கைது


ஆவடி அருகே போலி நகையை கொடுத்து மோசடி செய்ய முயன்ற 2 பெண்கள் கைது
x
தினத்தந்தி 25 May 2019 5:00 AM IST (Updated: 25 May 2019 1:35 AM IST)
t-max-icont-min-icon

தங்கம் என்று கூறி போலி நகையை கொடுத்து மோசடி செய்ய முயன்ற 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

ஆவடி,

ஆவடியை அடுத்த பட்டாபிராம் கோபாலபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பிரவீன்குமார். இவருடைய மனைவி தீபா (வயது 27). இவர், தனது அத்தை ராணியுடன் நேற்று காலை கோபாலபுரம் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அவர்களுக்கு எதிரே வந்த 2 பெண்கள், “எங்களிடம் தாலியில் கோர்த்துக்கொள்ளும் அம்மன் படம் பொறித்த தங்க டாலர்கள் உள்ளன. எங்களுக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதால் அதை வைத்துக்கொண்டு ரூ.3 ஆயிரம் தாருங்கள்” என தீபாவிடம் கேட்டனர்.

அவர்கள் மீது சந்தேகமடைந்த தீபா, இதுபற்றி தனது கணவர் பிரவீன் குமாருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தார். அங்கு வந்த பிரவீன்குமார், அந்த பெண்களிடம் இருந்த தங்க நகையை வாங்கி பார்த்தார். அதில் அவை போலி என்பது தெரிந்தது.

இதுபற்றி அவர் பட்டாபிராம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், 2 பெண்களையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அதில் அவர்கள், திருச்சியை அடுத்த முத்தரசநல்லூர் கணபதி நகரை சேர்ந்த மங்கம்மா (23) மற்றும் மகேஸ்வரி (23) என்பதும், தங்கம் என்று கூறி போலி நகையை கொடுத்து மோசடி செய்ய முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து 2 பெண்களையும் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story