தவறான ஆபரேசனால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு செலவில் சிகிச்சை; மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
தவறான ஆபரேசனால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு செலவில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
விருதுநகர் மாவட்டம் ஆமத்தூரைச் சேர்ந்த மகாலிங்கம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:–
நான் சுமை தூக்கும் கூலி வேலை செய்கிறேன். எனக்கு பாண்டீஸ்வரி (வயது 30) என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த மாதம் 30–ந்தேதி பாண்டீஸ்வரிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தோம். அப்போது அவரது கர்ப்பப்பையில் கட்டி இருப்பதும், ஆபரேசன் மூலம் அதை அகற்ற வேண்டும் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க பணவசதி இல்லாததால் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் என் மனைவியை சேர்த்தேன். அங்கு அவருக்கு ஆபரேசன் செய்து, கட்டியை அகற்றினர். சில நாட்களிலேயே அவருடைய வலது காலில் கடுமையான வலி ஏற்பட்டது. இதையடுத்து காலில் பரிசோதனை செய்ததில், ஆபரேசனில் நடந்த தவறால் வலது கால் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு, கால் வலி வந்தது தெரியவந்தது.
பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தோம். அங்கு அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை. தற்போது எனது மனைவியின் காலை அகற்ற வேண்டும் என்றும், இல்லையென்றால் அவரது உயிருக்கு ஆபத்து என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். அவர் தினமும் வலியால் துடிக்கிறார்.
எனவே என் மனைவியை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து அரசு செலவில் சிகிச்சை அளிக்கவும், ஆபரேசனில் ஏற்பட்ட தவறுக்கு காரணமான டாக்டர்கள் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், இதற்கான இழப்பீட்டை வழங்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
முடிவில், ‘‘மனுதாரர் மனைவிக்கு நல்ல முறையில் சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும். இதற்காக அவரை வேறு அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றலாம். சிகிச்சை செலவுத்தொகையை அரசே ஏற்க வேண்டும்’’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.