திருமணமான 9 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை வரதட்சணை கொடுமையா? போலீசார் விசாரணை


திருமணமான 9 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை வரதட்சணை கொடுமையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 27 May 2019 4:00 AM IST (Updated: 27 May 2019 12:18 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே காதலித்து திருமணம் செய்த 9 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். வரதட்சணை கொடுமை காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவள்ளூர்,

ஆந்திர மாநிலம் சிந்தலபாளையத்தை சேர்ந்தவர் மதுசூதனன் என்கிற கிஷோர் (வயது 26). இவர் அதே பகுதியை சேர்ந்த மாலினி (20) என்ற பெண்ணை காதலித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் தனிக்குடித்தனம் செல்ல முடிவு செய்து திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஆஞ்சநேயபுரத்தில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு தங்கி வந்தனர். மதுசூதனன் காக்களூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனவேதனை அடைந்த மாலினி நேற்று முன்தினம் தன் வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து மாலினியின் தந்தை திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதில், மகள் மாலினியை வரதட்சணை கேட்டு அவரது கணவர் கொடுமைப்படுத்தி உள்ளார். அவளது சாவில் மர்மம் உள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

Next Story