ஆரல்வாய்மொழி அருகே 17வயது சிறுமியை காதலன் கடத்தினாரா? போலீசார் விசாரணை


ஆரல்வாய்மொழி அருகே 17வயது சிறுமியை காதலன் கடத்தினாரா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 27 May 2019 3:45 AM IST (Updated: 27 May 2019 2:50 AM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழி அருகே 17வயது சிறுமி மாயமானார். அவரை காதலன் கடத்தினாரா? என நாகர்கோவில் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில்,

ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த 17வயது சிறுமி பிளஸ்-2 படித்து உள்ளார். சிறுமி தனது குடும்பத்தினருடன் மும்பையில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆரல்வாய்மொழி பகுதியில் சிறுமியின் தந்தை சொந்த வீடு கட்டி குடும்பத்துடன் குடியேறினார். பின்னர் சிறுமியின் தந்தை தொழில் சம்பந்தமாக மீண்டும் மும்பைக்கு சென்று விட்டார். புதுவீட்டில் சிறுமி தனது தாயாருடன் வசித்து வந்தார்.

காவல்கிணறு வடக்கன்குளத்தை சேர்ந்த முத்துசெல்வன் (24) என்பவர் சிறுமியின் வீட்டின் அருகே உள்ள அவரது பள்ளி நண்பர்களை காண வருவது வழக்கம். அப்போது முத்துசெல்வனுக்கும், 17வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மாறியதாகவும் கூறப்படுகிறது.

இவர்களது காதல் விவகாரம் சிறுமியின் தாயாருக்கு தெரியவந்தது. இதனால் அவரது தாயார் சிறுமியை கண்டித்து உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானார். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தேடியும் சிறுமி எங்கும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி வழக்குப்பதிவு செய்தார். மேலும் சிறுமியை வாலிபர் கடத்தி இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

எனவே சிறுமியை மீட்பதற்கு வாலிபரின் செல்போன் சிக்னல் மூலம் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். 

Next Story