தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீர் தொற்றுநோய் பரவும் அபாயம்


தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீர் தொற்றுநோய் பரவும் அபாயம்
x
தினத்தந்தி 28 May 2019 4:00 AM IST (Updated: 28 May 2019 12:48 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் உள்ள மிகப்பழமையான மருத்துவக்கல்லூரிகளில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும் ஒன்றாகும். சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தஞ்சை மட்டுமின்றி திருவாரூர், நாகை, அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து, சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 4 நுழைவு வாயில்கள் உள்ளன. இதில் 2-வது நுழைவு வாயில் முன்பு நேற்று கழிவுநீர் குளம்போல் தேங்கி நின்றது. மருத்துவமனையில் இருந்து கழிவுநீர் செல்வதற்காக போடப்பட்டிருந்த வடிகாலில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் அதிகஅளவில் வெளியேறி கொண்டிருந்தது. குளம்போல் கழிவுநீர் தேங்கியிருந்ததால் 2-வது கேட் வழியாக ஆட்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

கொசுக்கள் உற்பத்தி

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து மருத்துவக்கல்லூரிக்கு செல்லும் பஸ்கள் மட்டுமின்றி கார், மோட்டார் சைக்கிள் போன்ற பெரும்பாலான வாகனங்கள் 2-வது கேட் வழியாக தான் வந்து செல்கின்றன. நேற்று மருத்துவமனைக்கு வந்த பஸ்கள், கார்கள் எல்லாம் தேங்கியிருந்த கழிவுநீரில் சென்று வந்தன. மருத்துவமனை மட்டுமின்றி மருத்துவக்கல்லூரி, செவிலியர் கல்லூரியும் இதே வளாகத்தில் உள்ளது.

இங்கே படிக்கும் மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கியிருந்தாலும் வாகனங்களில் வெளியே சென்று வர இந்த கேட்டை தான் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் வளாகத்தில் உள்ள வங்கிக்கு அந்த பகுதியில் வசித்து வரும் மக்கள் பலர் தினமும் வந்து செல்கின்றனர். இவர்கள் 2-வது கேட்டிற்கு வந்து அங்கே தேங்கியிருந்த கழிவுநீரை பார்த்தவுடன் மாற்றுவழியை நோக்கி சென்றனர்.

தேங்கிய கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாவதுடன் துர்நாற்றமும் வீசுகிறது. தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. நோய்கள் குணமாக வேண்டும் என மருத்துவமனையை தேடி மக்கள் வருகின்றனர். ஆனால் அந்த மருத்துவமனையே நோயை பரப்பும் இடமாக திகழ்வதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே கழிவுநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்டதுறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடிக்கடி...

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2-வது கேட் மற்றும் அம்மா உணவகத்தின் பின்புறம் கழிவுநீர் தேங்கும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. கழிவுநீர் செல்லக்கூடிய வடிகாலில் அடிக்கடி அடைப்புகள் ஏற்படுவதால் கழிவுநீர் வெளியேறி தேங்குகிறது. இந்த அடைப்புகளை தற்காலிகமாக சரி செய்தாலும் மீண்டும், மீண்டும் அடைப்புகள் ஏற்பட்டு கொண்டே தான் இருக்கிறது. எனவே கழிவுநீர் வெளியேறாமல் இருக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க மருத்துவமனை நிர்வாகம் முன்வர வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறும்போது, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மிகவும் பிரபலமானது. அனைத்து வசதிகளும் உள்ளன. மேலும் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கழிவுநீர் தேங்கும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. வடிகாலில் அடைப்பு ஏற்படுவதால் அம்மா உணவகம் பின்புறமும், 2-வது கேட் முன்பும் கழிவுநீர் வெளியேறுகிறது. கழிவுநீர் செல்லும் வடிகாலை சீரமைத்து கழிவுநீர் தேங்காமல் இருக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story