புதுச்சேரியில் பரபரப்பு ரூ.10லட்சம் கேட்டு பைனான்சியரை தாக்கி கொலை மிரட்டல்; தப்பி ஓடிய கும்பலுக்கு வலைவீச்சு


புதுச்சேரியில் பரபரப்பு ரூ.10லட்சம் கேட்டு பைனான்சியரை தாக்கி கொலை மிரட்டல்; தப்பி ஓடிய கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 27 May 2019 11:30 PM GMT (Updated: 27 May 2019 7:44 PM GMT)

வேல்ராம்பட்டு ஏரிக்கரை அருகே ரூ.10லட்சம் கேட்டு பைனான்சியரை தாக்கி விட்டு தப்பி ஓடிய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி லாஸ்பேட்டை மகாவீர் நகர் பகுதியை சேர்ந்த சேர்ந்தவர் சபரி(வயது 37). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் வேல்ராம்பேட் பகுதியை சேர்ந்த தீபன் என்பவரிடம் ரூ.9 லட்சம் கடனாக வாங்கி இருந்தார். அதற்கான வட்டியை செலுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் தனது தொழிலுக்கு கூடுதலாக ரூ.50 ஆயிரம் தேவைப்பட்டது. உடனே அவர் தீபனை தொடர்பு கொண்டு ரூ.50 ஆயிரம் கேட்டுள்ளார். அவர் கூறிய படி பணத்தை வாங்க வேல்ராம்பட்டு சென்றுள்ளார்.

அப்போது தீபன் தனது நண்பர்களுடன் அங்கு நின்று கொண்டு இருந்தார். அவர்கள் சபரியை பார்த்த உடன் இவரிடம் பணம் கொடுத்தால் திரும்ப வாங்க முடியாது. இவர் ஒரு மோசடி பேர்வழி என்று கூறியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த தீபன் தனது நண்பர்களுடன் சேர்ந்து சபரியை அங்குள்ள ஒரு கேபிள் டி.வி. அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் தான் ஏற்கனவே கொடுத்த பணம் ரூ.9லட்சத்திற்கு வட்டியுடன் சேர்த்து ரூ.10லட்சம் தர வேண்டும் என்று கேட்டு கத்தி, தடி, கேபிள்வயர் ஆகியவற்றை கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது.

பணத்தை கொடுக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சபரி தனது செல்போன் மூலம் தனது தொழில் பாட்னர் ராஜா என்கிற ராஜேந்திரனை(35) செல்போனில் தொடர்பு கொண்டு ரூ.10லட்சம் உடனடியாக கொண்டு வந்து தன்னை உயிருடன் காப்பாற்றுமாறு கூறியுள்ளார்.

அப்போது சபரி தாக்குதலுக்கு உள்ளாகி அலறி துடிக்கும் சத்தம் கேட்டது. உடனே ராஜேந்திரன் அவரிடம் எங்கு இருக்கிறாய் என்று கேட்டுள்ளார். அதற்குள் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ராஜேந்திரன் இது குறித்து சபரியின் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். மேலும் அவர் இது தொடர்பாக லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதனை தொடர்ந்து லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்–இன்ஸ்பெக்டர் ஜாகீர்உசேன் மற்றும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் களத்தில் இறங்கினர். உடனே அவர்கள் சபரி பேசிய செல்போன் எண்ணில் மீண்டும் தொடர்பு கொண்டு பணத்தை எங்கு கொண்டு வர வேண்டும் என்று கேட்டனர். அப்போது அந்த கும்பல் பணத்தை 100 அடி ரோட்டில் உள்ள பாலத்திற்கு கொண்டு வரும்படி கூறியது.

அவர்கள் கூறியது போல் பணத்தை அங்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே பணம் கேட்டு மிரட்டிய கும்பல் அங்கு வந்தது. அப்போது போலீசார் சாதாரண உடையில் நடமாடுவதை கண்டவுடன் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. பின்னர் அந்த கும்பல் சபரிநாதனை மீண்டும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தின் அருகே சபரியை இறக்கி விட்டு அந்த கும்பல் தலைமறைவாகியது. அப்போது போலீசாரிடம் கொடுக்கல், வாங்கல் தகராறில் லேசான அடிதடி என்று கூற வேண்டும் இல்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே அவர்களிடம் இருந்து உயிர்தப்பிய சபரி முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்று தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தெரிவித்தார். பின்னர் இது குறித்து அவரது மனைவி, குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சபரியை சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து டி.ஜி.பி. சுந்தரி நந்தா உத்தரவின் பேரில் இந்த வழக்கு லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் இருந்து முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்–இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார், சபரிநாதன் மீது தாக்குதல் நடத்திய கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கந்துவட்டி கும்பலால் தாக்குதலுக்கு ஆளான சபரி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து விரிவாக பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் தீபன் தலைமையிலான கும்பல் தன்னை சிறைவைத்து தாக்கியதாக கூறியுள்ளார். மேலும் தன்னை 5 பேர் தாக்கியதாகவும், அவர்கள் 5 பேரால் தனக்கும், தனது குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து இருப்பதாக கூறியுள்ளார். இதில் சிலர் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் என்று கூறி தன்னை மிரட்டியதாக கூறியுள்ளார். இந்த வீடியோவை பார்வையிட்ட போலீசார் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.


Next Story