இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.4,500 லஞ்சம் சார்பதிவாளர் அலுவலக பெண் ஊழியர் கைது


இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.4,500 லஞ்சம் சார்பதிவாளர் அலுவலக பெண் ஊழியர் கைது
x
தினத்தந்தி 30 May 2019 3:45 AM IST (Updated: 30 May 2019 2:04 AM IST)
t-max-icont-min-icon

மோகனூர் அருகே, இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.4,500 லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் அலுவலக பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள ஆண்டாபுரத்தை சேர்ந்தவர் தங்கம்மாள். இவர் கடந்த 1995-ம் ஆண்டு இறந்துவிட்டார். இவரின் இறப்பு சான்றிதழ் நகல் வேண்டி இவரது பேத்தி திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த பெரியசாமி மகள் ராதா (40), மோகனூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

பின்னர் இது தொடர்பாக அங்கு பணியாற்றி வரும் இளநிலை உதவியாளர் காந்திமதி என்பவரை ராதா சந்தித்துள்ளார். அவர் இது பல ஆண்டுக்கு முந்தைய சான்றிதழ் என்பதால் அதை தேடி பார்ப்பதற்கு சிரமம். எனவே ரூ.5,000 லஞ்சமாக கொடுத்தால் தேடி எடுத்துத்தருவதாக கூறியுள்ளார். ஆனால் அவ்வளவு பணம் தரமுடியாது என ராதா தெரிவித்துள்ளார். அதையடுத்து பேரம் பேசப்பட்டு இறுதியில் ரூ.4,500 தரவேண்டும் என்று இளநிலை உதவியாளர் கூறியதாக தெரிகிறது.

உதவியாளர் கைது

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ராதா, இதுகுறித்து நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து அவர்களின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூ.4,500-ஐ நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் மோகனூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் காந்திமதியிடம், ராதா கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையிலான போலீசார், காந்திமதியை கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை நடத்தினர்.

Next Story