ஆசிரியர் தகுதி தேர்வினை 18,735 பேர் எழுதுகின்றனர் கலெக்டர்கள் தகவல்


ஆசிரியர் தகுதி தேர்வினை 18,735 பேர் எழுதுகின்றனர் கலெக்டர்கள் தகவல்
x
தினத்தந்தி 3 Jun 2019 4:15 AM IST (Updated: 3 Jun 2019 1:15 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் ஆசிரியர் தகுதி தேர்வினை 18,735 பேர் எழுதுகின்றனர் என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்தனர்.

அரியலூர்,

தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் மற்றும் 2-ம் தாள் நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடுகள் சம்பந்தமான கூட்டம் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) பொற்கொடி தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி முன்னிலை வகித்தார். அப்போது கலெக்டர் பொற்கொடி பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் வருகிற 8-ந் தேதியும், 2-ம் தாள் 9-ந் தேதியும் நடைபெறவுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் 2,097 பேர், 6 தேர்வு மையங்களிலும், 2-ம் தாள் 7,071 பேர், 12 தேர்வு மையங்களிலும் தேர்வுவெழுத உள்ளனர். தேர்வு நடைபெறும் நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கவும், தேர்வர்கள் குறித்த நேரத்தில் தேர்வு மையத்திற்கு தேர்வெழுத ஏதுவாக போதிய பஸ் வசதியும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்வுகள் அமைதியாக நடைபெற ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் துப்பாக்கி ஏந்திய ஒரு போலீசார் உட்பட போதிய போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் செந்தில், பள்ளித்துறை ஆய்வாளர் பழனிசாமி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள், போக்குவரத்துத்துறை, மின்சாரத்துறை உள்பட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வை சிறப்பாக நடத்திட மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது. அப்போது அவர் கூறுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாளினை 43 மாற்றுத்திறனாளிகள் உள்பட 2,291 பேர், 6 தேர்வு மையங்களில் தேர்வு எழுதவுள்ளனர். மேலும் இந்த தேர்வினை கண்காணிப்பதற்காக 224 அலுவலர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்கள் கொண்டு செல்வதற்காக 2 வழித்தட அலுவலர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதே போல் ஆசிரியர் தகுதி தேர்வு 2-ம் தாளினை 94 மாற்றுத்திறனாளிகள் உள்பட 7,276 பேர், 20 மையங்களில் தேர்வு எழுதவுள்ளனர். இந்த தேர்வினை கண்காணிப்பதற்காக 723 அலுவலர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்கள் கொண்டு செல்வதற்காக 6 வழித்தட அலுவலர்களும் பணியில் ஈடுபடவுள்ளனர். தேர்வு எழுதுபவர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று வர பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் மற்றும் மாவட்டத்தின் இதர பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் தேர்வு எழுதுபவர்கள், தேர்வு மையங்களுக்கு செல்போன் எடுத்துச் செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது என்றார். இந்த கூட்டத்தில் முதன்மை கல்வி அதிகாரி அருளரங்கன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story