மீனாட்சி அம்மன் கோவிலில் முதியோர், கர்ப்பிணிகளை சிறப்பு தரிசன வழியில்தான் அனுமதிக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


மீனாட்சி அம்மன் கோவிலில் முதியோர், கர்ப்பிணிகளை சிறப்பு தரிசன வழியில்தான் அனுமதிக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 5 Jun 2019 5:01 AM IST (Updated: 5 Jun 2019 5:01 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முதியோர், கர்ப்பிணிகளை சிறப்பு தரிசன வழியில் அனுமதிப்பதை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த வக்கீல் மணிகண்டன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலக அளவில் பிரசித்தி பெற்றது. அங்கு தரிசனத்துக்கு எப்போதுமே கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் மூத்த குடிமக்கள், ஊனமுற்றோர், தாய்மார்கள், கர்ப்பிணிகள் ஆகியோர் சாமி தரிசனம் செய்ய தனி வரிசை அமைத்து, அவர்கள் சுலபமாக தரிசனம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். ஆனால் எனது மனுவின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பக்தர்கள் கூட்டம் அதிக அளவு இருப்பதன் காரணமாக மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய இயலவில்லை. ஆனால் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் சிறப்பு தரிசன வழியாக சென்று எளிதில் சாமி தரிசனம் செய்கிறார்கள். இதேபோல் மூத்த குடிமக்கள், ஊனமுற்றோர், குழந்தை வைத்திருக்கும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணிகளை சிறப்பு தரிசன வரிசையில் அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.

அந்த மனு, நீதிபதிகள் சத்தியநாராயணா, புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, “மூத்த குடிமக்கள், ஊனமுற்றோர், குழந்தைகளை வைத்திருக்கும் நபர்கள் மற்றும் கர்ப்பிணிகளை சிறப்பு தரிசன வரிசையில் அனுமதிக்க வேண்டும் என கடந்த நவம்பர் மாதம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது“ என்று தெரிவித்தார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த ஆணையை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனக்கூறி வழக்கை முடித்துவைத்தனர்.


Next Story