ஆஸ்பத்திரி பெயரில் போலி முகநூல் கணக்கு: வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் மோசடி வழக்கு பதிவு
ஈரோட்டில் ஆஸ்பத்திரியின் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கியது தொடர்பாக வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். மேலும், சிறுநீரகத்துக்கு ரூ.3 கோடி தருவதாக தகவல் பரப்பியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோடு,
ஈரோடு சம்பத்நகரில் பிரபல தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. சிறுநீரக சிகிச்சை மற்றும் டயாலிசிஸ் சிகிச்சையில் குறிப்பிடத்தக்க ஆஸ்பத்திரிகளில் ஒன்றாக இது உள்ளது.
இந்த ஆஸ்பத்திரியின் பெயரில் சில மாதங்களுக்கு முன்பு முகநூல் பக்கம் ஒன்று தொடங்கப்பட்டு இருக்கிறது. அதில், சிறுநீரகம் தானம் வழங்குபவர்கள் பதிவு செய்யலாம் என்றும், சிறுநீரகம் வழங்குபவர்களுக்கு ரூ.3 கோடி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் அந்த பதிவில் முன்பதிவு செய்பவர்கள் முன்பணமாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இதை நம்பிய பலரும் ரூ.10 ஆயிரம் செலுத்தி முன்பதிவு செய்து இருக்கிறார்கள். ஆனால் பணம் செலுத்தியவர்களுக்கு எந்த வகையான தகவல்களும் வரவில்லை. எனவே ஆஸ்பத்திரியின் நிர்வாக இயக்குனர் வீட்டுக்கும், சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிக்கும் பலரும் வந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறியபடி சிறுநீரகத்தை எடுத்து விட்டு ரூ.3 கோடி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
தொடர்ச்சியாக இதுபோன்று பலரும் வந்ததால் அதிர்ச்சி அடைந்த ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் விசாரித்தபோது ஆஸ்பத்திரியின் பெயரில் முகநூலில் செயல்பட்ட பக்கம் போலியானது என்று தெரிய வந்தது. உடனடியாக இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர் சார்பில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன் உடனடி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும், சைபர் கிரைம் போலீசார் மூலம் சம்பந்தப்பட்ட போலி முகநூல் பக்கம் முடக்கப்பட்டது.
பின்னர் போலீசார் இதுபற்றி விசாரித்தபோது 500–க்கும் மேற்பட்டவர்கள் தலா ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை பணம் செலுத்தி ஏமாந்தது தெரியவந்தது. இந்த முகநூல் பக்கத்தை தொடங்கியது யார்? என்பது தெரியவில்லை. இந்த நிலையில் தனியார் ஆஸ்பத்திரி வழங்கிய புகாரின் அடிப்படையில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து உள்ளனர். முகநூலில் போலியாக பக்கத்தை உருவாக்கியது யார்? இதுபோன்று வேறு போலி பக்கங்கள் உருவாக்கப்பட்டு உள்ளனவா? போலி விளம்பரத்தை பார்த்து பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் எத்தனைபேர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், சிறுநீரகம் வழங்கினால் ரூ.3 கோடி பணம் தருவதாக தகவல் பரப்பிய மோசடி ஆசாமிகளையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெரிய நிறுவனங்கள் தங்கள் பெயரில் செயல்படும் முகநூல் பக்கங்கள் அனைத்தும் தங்கள் சொந்த பக்கங்களா? இல்லை போலியாக செயல்படுபவையா என்று அந்தந்த நிறுவனங்களின் நிர்வாகிகள் சோதனை செய்து போலியானவற்றை நீக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக்கொண்டு உள்ளனர்.