58 ஆண்டுகளுக்குப்பிறகு ரூ.8 கோடியில் புதுப்பொலிவு பெறுகிறது: சிவகங்கை பூங்கா புனரமைப்பு பணிகள் தீவிரம்


58 ஆண்டுகளுக்குப்பிறகு ரூ.8 கோடியில் புதுப்பொலிவு பெறுகிறது: சிவகங்கை பூங்கா புனரமைப்பு பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 7 Jun 2019 4:15 AM IST (Updated: 7 Jun 2019 12:58 AM IST)
t-max-icont-min-icon

58 ஆண்டுகளுக்குப்பிறகு ரூ.8 கோடியில் புதுப்பொலிவு பெரும் தஞ்சை சிவகங்கை பூங்கா புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தஞ்சாவூர்,

தஞ்சை நகராட்சி 1866-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு 1983-ம் ஆண்டு சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. பின்னர் 2014-ம் ஆண்டு தஞ்சை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சை மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள ரூ.897 கோடியே 60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் குடிநீர் அபிவிருத்தி, பாதாள சாக்கடை, சிவகங்கை பூங்கா உள்ளிட்ட பூங்காக்கள் சீரமைப்பு, பஸ் நிலையத்தை மேம்படுத்துதல், குளங்களை பாதுகாத்தல், காமராஜர், சரபோஜி மார்க்கெட்டில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளுதல், அங்கன்வாடிகளை மேம்படுத்துதல், உரம் தயாரிக்கும் கூடம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சிவகங்கை பூங்கா

தஞ்சை நகரில் உள்ள சுற்றுலா தலங்களுள் ஒன்று சிவகங்கை பூங்கா. தஞ்சை சிவகங்கை பூங்கா ஆரம்ப காலத்தில் சிறு, சிறு மரங்கள், செடிகளை கொண்டதாக இருந்தது. அத்துடன் பொதுமக்கள் மாலை நேரங்களில் மட்டும் கூடி பொழுது போக்கும் இடமாக இருந்தது. நாளடைவில் பொதுமக்களின் வருகையை அதிகரிக்க சிவகங்கை பூங்காவில் பல அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி 1960-61-ம் ஆண்டில் சிவகங்கை பூங்கா மிகப்பெரிய மாற்றத்தை கண்டது. மிருகங்கள், பறவைகள் இங்கு கொண்டு வரப்பட்டன. இதனையடுத்து தஞ்சை மாநகராட்சிக்கு வருவாய் ஈட்டித்தரும் முக்கிய இடமாக சிவகங்கை பூங்கா தற்போது திகழ்ந்து வருகிறது. அவ்வப்போது இந்த பூங்காவில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும் 58 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது பூங்கா முற்றிலும் புதுப்பொலிவை பெற உள்ளது

ரூ.8 கோடி நிதி

இந்த பூங்காவில் சுதந்திரதின பொன்விழா ஆண்டின் நினைவு தூண், அறிவியல் பூங்கா, நீர்வீழ்ச்சி, நீச்சல் குளம், உல்லாச படகு சவாரி, செயற்கை நீரூற்றுகள், சிறுவர்களுக்கான ரெயில், சிறுவர்கள் விளையாடுவதற்கான விளையாட்டரங்கம், தொங்கு பாலம், இருக்கைகள், புல்தரைகள் உள்ளிட்டவைகள் இடம் பெற்று இருந்தன. நரி, சீமை எலி, மான்கள், மயில் போன்ற உயிரினங்களும் இங்கு உள்ளன.

ஆனால் அறிவியல் பூங்கா, தொங்கு பாலம், செயற்கை நீரூற்று உள்ளிட்டவை நாளடைவில் செயல்படவில்லை. சிறுவர்களுக்கான ரெயிலும் செயல்படாமல் உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சை சிவகங்கை பூங்காவில் மட்டும் ரூ.8 கோடியே 10 லட்சம் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதில் பலூன் விளையாட்டு, காளை விளையாட்டு, நீச்சல் படகுசாவடி, சிறுவர்களுக்கான ரெயில், ஸ்கேட்டிங் விளையாடுவதற்கான தளம், பூங்காவை சுற்றி வரவும், பெரியகோவில் அகழியை சைக்கிளில் சுற்றி வந்து பார்க்கும் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது.

பணிகள் தீவிரம்

மேலும் தஞ்சையை ஆண்ட மன்னர்கள், அவர்கள் செய்த சாதனைகள் மற்றும் வரலாற்றை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் ஆங்காங்கே பளிங்கு கற்களால் செய்யப்பட்ட தகவல் பலகையும் இடம் பெறுகின்றன. பொதுமக்கள் அமருவதற்கு நவீன இருக்கை வசதிகளும் செய்யப்படுகின்றன. புதிய படகு சவாரி, புதிதாக புல்தரை அமைத்தல், சிறுவர்களுக்கான விளையாட்டு அரங்கங்களை மேம்படுத்துதல், செயற்கை நீரூற்றுகளை மேம்படுத்துதல் என சிவகங்கை பூங்காவே புதுப்பொலிவு பெற உள்ளது.

இதற்காக தற்போது சிவகங்கை பூங்காவில் பணிகள் திவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக அங்கு அமைக்கப்பட்டு இருந்த ரெயில் தண்டவாளம் பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு போடப்பட்டு இருந்த கல்தளம், செங்கல் தளங்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு ஆங்காங்கே பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் சிவகங்கை பூங்கா குளத்தின் நடுவில் உள்ள கோவிலும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக குளத்திற்குள் சாரம் அமைக்கப்பட்டு பணிகள் மேற்கெள்ளப்பட்டு வருகின்றன.

Next Story