கல்வி உதவித்தொகையை தடையின்றி வழங்கக் கோரி தஞ்சையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
கல்வி உதவித்தொகையை தடையின்றி வழங்கக் கோரி தஞ்சையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் ஆகியவை சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் இளையராஜா, மாவட்ட செயலாளர் செந்தூர்நாதன் ஆகியோர் தலைமை தாங்கினர். தேசியக்குழு உறுப்பினர் பாரதி, மாவட்ட செயலாளர் முகிலன் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்து கொடுக்கும் முடிவை கைவிட வேண்டும். அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிளஸ்–2 மாணவர்களுக்கு ஒரு ஆண்டாக மடிக்கணினி வழங்கப்படவில்லை. உடனே மடிக்கணினி வழங்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு கல்லூரிகளை புதிதாக தொடங்க வேண்டும். அரசு கல்லூரியில் பாட பிரிவுகளையும், மாணவர் சேர்க்கை இடங்களையும் அதிகப்படுத்த வேண்டும்.
மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை தடையின்றி வழங்க வேண்டும். போராடிய ஆசிரியர்களை பழிவாங்கும் விதமாக பதவி உயர்வு கிடையாது என்ற அரசின் முடிவை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
முடிவில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சக்திவேல் நன்றி கூறினார்.