உளுந்தூர்பேட்டை அருகே பட்டாசு குடோனில் வெடி விபத்து கட்டிடம் இடிந்து தரைமட்டம்
பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் கட்டிடம் இடிந்து தரைமட்டமானது.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே நடந்த இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கோவுலாபுரத்தை சேர்ந்தவர் செந்தில் (வயது 35). இவர் உளுந்தூர்பேட்டை அருகே கொறட்டூர் கிராமத்தில் அரசின் அனுமதி பெற்று 2 பட்டாசு குடோன்கள் வைத்துள்ளார். இதில் ஒரு குடோனில் வெடி மருந்துகளும், மற்றொரு குடோனில் விற்பனைக்காக செய்யப்பட்டிருந்த வெடிகளும் வைக்கப்பட்டிருந்தன.
நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்ததும் வழக்கம் போல் ஊழியர்கள், 2 குடோன்களையும் பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை ஒரு குடோனில் விற்பனைக்காக செய்து வைக்கப்பட்டிருந்த வெடிகள் திடீரென வெடிக்க தொடங்கியது. இந்த சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜமுனா ராணி தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அதற்குள் குடோனில் இருந்த அனைத்து வெடிகளும் வெடித்து சிதறியதில், கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. மேலும் தீயணைப்பு வீரர்கள், எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து அருகில் வெடி மருந்து இருந்த குடோனுக்கு தீ பரவாமல் தடுத்தனர்.
இதில் 2½ கிலோ எடையுள்ள வெடிகள் வெடித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தரைமட்டமான பட்டாசு குடோனை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து செந்தில், திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு குடோனில் இருந்த வெடிகள் வெடித்ததில், கட்டிடம் இடிந்து தரைமட்டமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.