திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்; 50 பேர் கைது
திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர். போராட்டக்காரர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர்.
திருப்பூர்,
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு அமைப்புகள், கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் கடந்த ஒருசில தினங்களுக்கு முன்பு நீட் தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. இதில் ஏராளமானோர் தோல்வி அடைந்தனர்.
தோல்வி அடைந்த திருப்பூரை சேர்ந்த ரிதுஸ்ரீ என்ற மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபோல உயிரிழப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு வருவதாகவும், இதனால் உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறிது நேரத்திலேயே பல்லடம் ரோட்டின் குறுக்கே சாலையில் அமர்ந்து திடீரென்று மறியலில் ஈடுபட்டனர். இதற்கு மாநில தலைவர் ரெஜிஸ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஞானசேகர், மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீட் தேர்வால் பல மாணவ, மாணவிகளின் டாக்டர் கனவும் தகர்ந்து வருவதால் பலர் தற்கொலை செய்து கொண்டு வருவதாகவும், உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், இல்லையென்றால் தமிழகத்திற்கு அதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இருப்பினும் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாமல் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் 50 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை அங்கிருந்து குண்டுக்கட்டாக தூக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்றினார்கள்.
இதனால் ஆத்திரம் அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி பல்லடம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனால் திருப்பூர்–பல்லடம் ரோட்டில் சிறிது நேரம்போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.