காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வராததால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை - ப.சிதம்பரம் பேச்சு


காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வராததால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை - ப.சிதம்பரம் பேச்சு
x
தினத்தந்தி 8 Jun 2019 12:15 AM GMT (Updated: 7 Jun 2019 11:46 PM GMT)

காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வராததால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை என காரைக்குடியில் நடந்த நன்றி அறிவிப்பு கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசினார்.

காரைக்குடி,

காரைக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். சங்கராபுரம் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் மாங்குடி வரவேற்றார். கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:–

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் வெற்றிக்கு பாடுபட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சிவகங்கை நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றிலேயே வெற்றி பெற்ற வேட்பாளர் பதிவான வாக்குகளில் 52 சதவீதம் பெற்றது இதுவே முதல் முறை. வடமாநிலங்களில் தனித்தனியாக பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் களம் கண்டு தோல்வியை தழுவி பா.ஜ.க. ஆட்சிக்கு வர வழி வகுத்துவிட்டன.

தற்போதைய சூழலில் வெற்றியை கொண்டாட முடியாத நிலையில் உள்ளோம். நாம் எப்போதுமே தோல்வியை கண்டு துவண்டது கிடையாது. வெற்றியைக் கண்டு எகத்தாளம் இட்டதுமில்லை. போராட்டங்களுக்கு எப்போதும் ஓய்வு கிடையாது. நாம் ஒரு போர்க்களத்தில் தான் தோல்வியை கண்டுள்ளோம். போரிலிருந்து அல்ல என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். போர் தொடரும், இறுதி வெற்றி நம்மையே சேரும். விவாதங்கள் தான் கட்சியை வலுப்படுத்தும்.

காந்தி, நேரு காலத்தில் சிறையில் நடந்த விவாதங்கள் தான் பெரிய போராட்டத்துக்கு வித்திட்டன. கருத்து வேறுபாடுகளை மறந்தால் கட்சி வலிமை அடையும். மக்களுக்காக போராட்டம் நடத்தி சிறையில் இருந்தோம் என்றால் கட்சி வலிமை பெறும். அந்த வகையில் நீங்கள் சிறைச்சாலை சென்றார் நானும் சிறைக்கு வர தயாராக உள்ளேன்.

நீண்டகாலமாக இணைந்து பணியாற்றி ஒற்றுமையாக தேர்தலை சந்தித்தவர்கள் வெற்றி கண்டுள்ளனர். உதாரணத்திற்கு தமிழகத்தையும், கேரளாவையும் கூறலாம். தமிழ்நாட்டில் தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணி ஏழாவது முறையாக வெற்றி பெற்றுள்ளது தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி காண்போம். காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வராததால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை என வருந்துகிறேன். 100 நாள் திட்டத்தை 150 நாளாக விரிவுபடுத்த முடியவில்லை. கல்வியை மாநில பட்டியலுக்குள் கொண்டு வர முடியவில்லை. 3 ஆண்டுகளுக்கு எந்த அனுமதியும் இல்லாமல் இளைஞர்கள் தொழில் தொடங்கலாம் என்ற திட்டத்தை அமல்படுத்த முடியவில்லை. மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டுவரமுடியவில்லை.

வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் உதவித்தொகை வழங்க முடியவில்லை. முடியவில்லை என்றால் முடியவே முடியாது என்று நினைக்காதீர்கள். இன்று முடியாதது, நாளை நிச்சயம் முடியும். எனவே நாம் நினைத்தவற்றை எல்லாம் அப்போது செய்து காட்டுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story