சென்னை விமான நிலையத்தில் 23 கிலோ தங்கம் பிடிபட்டது; 4 பேர் கைது


சென்னை விமான நிலையத்தில் 23 கிலோ தங்கம் பிடிபட்டது; 4 பேர் கைது
x
தினத்தந்தி 9 Jun 2019 11:00 PM GMT (Updated: 9 Jun 2019 7:45 PM GMT)

சென்னை விமான நிலையத்தில் மலேசியா, சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்த ரூ.8 கோடி மதிப்புள்ள 23 கிலோ தங்கம் மற்றும் குட்டி விமானம், விலை உயர்ந்த கேமராக்கள், ரூ.24 லட்சத்தை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், சுங்க இலாகா அதிகாரி உள்பட 5 பேரை கைது செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் மாறுவேடத்தில் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து சென்னை வந்த விமானங்களில் சுற்றுலா விசாவில் சென்றுவிட்டு திரும்பிய 4 பயணிகளை, சுங்க இலாகா அதிகாரி ஒருவர் எந்தவித சோதனையும் செய்யாமல் வெளியே அனுப்ப முயன்றதை கண்டுபிடித்தனர்.

உடனே மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அந்த 4 பேரையும் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் 4 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்கள். பின்னர் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் அவர்கள் 4 பேரும் 12 கிலோ 950 கிராம் எடைகொண்ட தங்க கட்டிகள், ‘டிரோன்’ என்ற ரகசிய கேமரா பொருத்தப்பட்ட குட்டி விமானம், விலையுயர்ந்த கேமராக்கள் ஆகியவற்றை கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

இவர்களுக்கு உடந்தையாக இருந்த சுங்க இலாகா அதிகாரி உள்பட 5 பேரிடமும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், சென்னையில் ஒரு இடத்தில் மறைத்து வைத்து இருந்த 10 கிலோ 200 கிராம் தங்க கட்டிகள் மற்றும் ரூ.24 லட்சத்து 43 ஆயிரம் பணத்தையும் கைப்பற்றினார்கள்.

இதையடுத்து சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேர் மற்றும் இவர்களுக்கு உதவிய சுங்க இலாகா அதிகாரி என 5 பேரையும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

மேலும் இந்த அதிரடி சோதனையில் ரூ.7 கோடியே 82 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 23 கிலோ 150 கிராம் எடை கொண்ட தங்க கட்டிகள், ரூ.23 லட்சம் மதிப்புள்ள ‘டிரோன்’ கேமரா பொருத்தப்பட்ட குட்டி விமானம், கேமராக்கள் மற்றும் ரூ.24 லட்சத்து 43 ஆயிரம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

தலைமறைவான சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த மேலும் சிலரையும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தேடிவருகின்றனர்.


Next Story