தகராறில் ஈடுபட்டவர்களை தடுக்க முயன்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் மீது தாக்குதல்; 3 பேர் கைது


தகராறில் ஈடுபட்டவர்களை தடுக்க முயன்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் மீது தாக்குதல்; 3 பேர் கைது
x
தினத்தந்தி 10 Jun 2019 4:30 AM IST (Updated: 10 Jun 2019 1:37 AM IST)
t-max-icont-min-icon

தகராறில் ஈடுபட்டவர்களை தடுக்க முயன்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேரை தாக்கியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடமலைக்குண்டு,

கடமலைக்குண்டு கிராமத்தில் மேலப்பட்டி சாலை பிரிவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று அதே பகுதியை சேர்ந்த ஒருவருடைய குழந்தைக்கு காதணி விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டவர்களில் 10–க்கும் மேற்பட்டோர் மதுபோதையில் மண்டபத்தின் எதிரே தேனி சாலையில் தங்களுக்குள் தகராறில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கடமலைக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் ரோந்து பணிக்கு வந்தனர். இந்த நிலையில் தகராறில் ஈடுபட்டவர்களை பார்த்த முருகன் அவர்களை தடுக்க முயன்றார். ஆனால் அவர்கள் முருகனுடன் வாக்குவாதம் செய்தனர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அவர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகனை தாக்கினர். இதையடுத்து மற்ற போலீசார், இன்ஸ்பெக்டரை தாக்கியவர்களை கைது செய்ய முயன்றனர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மோதல் முற்றிய நிலையில் கடமலைக்குண்டு போலீஸ்காரரான விக்னேஷ் என்பவரை தாக்கி விட்டு அவர்கள் தப்பிச்சென்றுவிட்டனர். இதையடுத்து வருசநாடு, மயிலாடும்பாறை பகுதிகளில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

பின்னர் தப்பிச்சென்றவர்களை வருசநாடு, மயிலாடும்பாறை போலீசாருடன் இணைந்து கடமலைக்குண்டு போலீசார் தேடினர். அப்போது போலீசாரை தாக்கியவர்களில் 3 பேர் கடமலைக்குண்டு உப்போடை தெருவில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்ற போலீசார் வீட்டுக்குள் பதுங்கியிருந்த வனராஜா (வயது 41), ஜெயராம் (36), ஜெயராமச்சந்திரன் (38) ஆகியோரை கைது செய்தனர். இதற்கிடையே போலீசார் தங்கள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து உறவினர்களை கைது செய்துவிட்டதாக கூறி 20–க்கும் மேற்பட்டோர் தேனி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதையறிந்த போலீசார் அவர்களை தடுத்தனர்.

மேலும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காமல் இருக்க அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த தேனி மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு சுருளிராஜன், ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை சூப்பிரண்டு கணபதி ஆகியோர் கடமலைக்குண்டுவுக்கு வந்து விசாரணை நடத்தினர். அத்துடன் தலைமறைவாக உள்ளவர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் தாக்குதலில் படுகாயமடைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், போலீஸ்காரர் விக்னேஷ் ஆகியோர் கடமலைக்குண்டுவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.


Next Story