பக்கத்து வீட்டில் கொலுசு மாயம்: போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தற்கொலை
பக்கத்து வீட்டில் கொலுசு மாயமானது தொடர்பாக போலீசார் தன்னை விசாரணைக்கு அழைப்பார்கள் என பயந்து வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
புதுச்சேரி,
புதுவை முத்திரையர்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முரளி. இவருடைய மனைவி பாகேஸ்வரி (வயது 41). இவர்களுடைய மகன் தினகரன் (வயது 20). கட்டிடத் தொழிலாளி. இவர் மீது கோரிமேடு போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்ளது.
இந்தநிலையில் தினகரன் வீட்டின் அருகே உள்ள பக்கத்து வீட்டில் கொலுசு மாயமானதாக தெரிகிறது. இதுதொடர்பாக அவர்கள் தினகரன் மீது போலீசில் புகார் அளிக்க இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் கொலுசு மாயமான விவகாரம் தொடர்பாக போலீசார் தன்னை விசாரணைக்கு அழைப்பார்களோ என்று பயந்துபோய் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தினகரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்தவுடன் மேட்டுப்பாளையம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தினகரன் தற்கொலை செய்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.