பெங்களூருவில் தோழியுடன் ஸ்கூட்டரில் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் கைது - பரபரப்பு தகவல்கள்


பெங்களூருவில் தோழியுடன் ஸ்கூட்டரில் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் கைது - பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 11 Jun 2019 9:15 PM GMT (Updated: 11 Jun 2019 7:22 PM GMT)

பெங்களூருவில், தோழியுடன் ஆபத்தான முறையில் ஸ்கூட்டரில் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெங்களூரு,

பெங்களூரு புறநகர் தேவனஹள்ளி ரோட்டில் வாலிபர் ஒருவர் இளம்பெண்ணுடன் சேர்ந்து ஸ்கூட்டரில் சாகசம் செய்தபடி சென்றார். அதாவது, ஸ்கூட்டரின் பின்இருக்கையில் இளம்பெண் அமர்ந்து இருக்க, அந்த வாலிபர் ஸ்கூட்டரின் முன்பக்க சக்கரத்தை மேல்நோக்கி தூக்கிய நிலையில் வேகமாக ஓட்டினார்.

மேலும், அந்த வாலிபர் தனது ஒரு காலை இருக்கையின் மீதும், இன்னொரு காலை மேல்நோக்கி நீட்டியபடி முன்சக்கரத்தை தூக்கி ஆபத்தை உணராமல் பயணித்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகின. அத்துடன் வாலிபர் தனது காதலியுடன் சாகசத்தில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் பரவின.

இதுகுறித்து ஹெப்பால் போக்குவரத்து போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து கொண்டனர். மேலும் சாகசம் செய்த வாலிபரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில் சாகசம் செய்ததாக பெங்களூரு எலகங்காவில் வசித்து வரும் நூர்அகமது (வயது 21) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர் எலகங்காவில் உள்ள அரசு கல்லூரியில் பி.காம். படித்து வருவது தெரியவந்தது. மேலும் அவருடைய தந்தை ஆட்டோ டிரைவர் என்பதும், ஸ்கூட்டரில் சாகசம் செய்ய விரும்பி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் நூர்அகமது தனது நண்பர் இம்ரான் கானின் ஸ்கூட்டரை வாங்கி பயிற்சி செய்தார். இந்த வேளையில் அவருக்கு பழக்கமான தோழி வீதா, நூர்அகமதுவின் சாகசத்தை கண்டு வியந்ததோடு, அவர் விருப்பப்பட்டு நூர்அகமதுவுடன் சென்றதும் தெரியவந்தது. கைதான நூர்அகமதுவிடம் இருந்த ஸ்கூட்டரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Next Story