அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் தி.மு.க., காங்கிரசுக்கு இல்லை திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி


அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் தி.மு.க., காங்கிரசுக்கு இல்லை திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 12 Jun 2019 4:45 AM IST (Updated: 12 Jun 2019 1:21 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் தி.மு.க., காங்கிரஸ் கட்சிக்கு இல்லை என்று திருநாவுக்கரசர் எம்.பி. கூறினார்.

புதுக்கோட்டை,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி. நேற்று மாலை புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் புதுக்கோட்டை நகர பகுதியில் திறந்த வாகனத்தில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

முன்னதாக திருநாவுக்கரசர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

அ.தி.மு.க.வில் நிலவும் ஒற்றை தலைமை பிரச்சினையால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மத்திய மந்திரி பதவி கிடைக்காமல் போய்விட்டது என்றே நான் கருதுகிறேன். எந்த கட்சியாக இருந்தாலும் அதற்கு ஒற்றை தலைமை இருப்பதுதான் சிறந்தது. அப்போதுதான் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும்.

ஊழல்தான் மிஞ்சும்

இந்த ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் கிடையாது. ஆனால் தானாகவே இந்த ஆட்சி கலையும் சூழல் ஏற்பட்டால், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. இன்னும் 1½ ஆண்டுகள் நீடிக்கும் இந்த ஆட்சியால், அ.தி.மு.க.விற்கு கெட்ட பெயரும், ஊழலும் தான் அதிகரிக்கும்.

2021-ம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் போட்டியிட வேண்டும். கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த அளவு இடங்களை கொடுக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியதில் தவறில்லை. அவரது எண்ணத்தை அவர் பிரதிபலித்து உள்ளார். சட்டமன்ற தேர்தல் வரும்போது கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தையின் மூலமாகத்தான், கட்சிகள் போட்டியிடும் இடங்கள் குறித்து ஸ்டாலின் முடிவெடுப்பார்.

மக்களுக்கு எதிரான திட்டங்களை...

நடிகர் சங்கத்தில் நானும் ஆயுட்கால உறுப்பினர். தற்போது நடைபெறும் நடிகர் சங்க தேர்தல் ஆரோக்கியமான தேர்தலாக இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். ஹைட்ரோகார்பன், நீட் தேர்வு என எந்த திட்டமாக இருந்தாலும், மக்களுக்கு எதிரான திட்டங்களை மத்திய அரசு கொண்டு வரும் போது அதனை எதிர்த்து தி.மு.க., காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்

Next Story