ரூ.1,200 கோடியுடன் நகைக்கடை அதிபர் தலைமறைவான வழக்கு: சிறப்பு விசாரணை குழு விசாரிக்க உத்தரவு - முதல்-மந்திரி குமாரசாமி அறிவிப்பு


ரூ.1,200 கோடியுடன் நகைக்கடை அதிபர் தலைமறைவான வழக்கு: சிறப்பு விசாரணை குழு விசாரிக்க உத்தரவு - முதல்-மந்திரி குமாரசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 12 Jun 2019 5:00 AM IST (Updated: 12 Jun 2019 1:50 AM IST)
t-max-icont-min-icon

ரூ.1,200 கோடியுடன் நகைக்கடை அதிபர் தலைமறைவான வழக்கை சிறப்பு விசாரணை குழு விசாரிக்க முதல்-மந்திரி குமாரசாமி நேற்று அதிரடி உத்தரவிட்டார்.

பெங்களூரு,

பெங்களூரு சிவாஜி நகரில் மன்சூர்கான் என்பவர் தங்க நகைக்கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நகைக்கடையில் முதலீடு செய்யும் நபர்களுக்கு அதிக வட்டி வழங்கப்படும் என்றும், முதலீடு செய்யும் பணத்துக்கு வட்டியுடன் சேர்த்து தங்க நகைகள் வழங்கப்படும் என்றும் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது.

இதை நம்பிய ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் மன்சூர்கானின் நகைக்கடையில் பணம் முதலீடு செய்தனர். ேகாடிக்கணக்கான ரூபாய் மன்சூர்கானுக்கு கிடைத்துள்ளது. இந்த நிலையில், மன்சூர்கான் திடீரென்று தலைமறைவான நிலையில் அவர் பேசியது போன்ற ஆடியோ ஒன்று வெளியானது.

அதில், ‘சிவாஜிநகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரோஷன்பெய்க்கிடம் ரூ.400 கோடி கொடுத்தேன். தற்போது அவர் பணத்தை கொடுக்க மறுக்கிறார். ரவுடிகளை வைத்து கொலை மிரட்டல் விடுக்கிறார். அரசு அதிகாரிகள் சிலருக்கும் பணம் கொடுத்துள்ளேன்’ என்பன போன்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

இதுபற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் நேற்று முன்தினம் நகைக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மன்சூர்கானிடம் இருந்து தங்களுக்கு பணம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். மொத்தமாக ரூ.500 கோடிக்கும் அதிகமாக மன்சூர்கான் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கமர்சியல் தெரு போலீசில் ஏராளமானவர்கள் புகார்கள் செய்தனர். நேற்று முன்தினம் மட்டும் 3,750 பேர் மன்சூர்கான் மீது புகார் அளித்தனர். இந்த புகார்களின் அடிப்படையில் மன்சூர்கான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டனர். மன்சூர்கானை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இதற்கிடையே, தலைமறைவான மன்சூர்கான் தனது குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு தப்பி சென்றதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் அவர் எங்கு இருக்கிறார்? என்பது பற்றிய உறுதியான தகவல்கள் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் மோசடியில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம் மக்கள் ஆவார்கள். இதனால், வழக்கு குறித்து உரிய விசாரணை நடத்தி, பணத்தை திரும்ப பெற்று கொடுக்க வேண்டும் எனக்கூறி உணவுத்துறை மந்திரி ஜமீர்அகமது கான், என்.ஏ.ஹாரீஸ் எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்சத் எம்.எல்.சி. மற்றும் பிரமுகர்கள் போலீஸ் மந்திரி எம்.பி.பட்டீலை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

இதற்கிடையே, நகைக்கடை உரிமையாளர் மன்சூர்கானிடம் பணம் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் புகார்கள் அளிக்க 2-வது நாளாக நேற்று கமர்சியல் தெரு போலீசார் ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி நேற்று சிவாஜிநகரில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து போலீசார் பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வாங்கினர்.

புகார் அளிப்பதற்காக நேற்று காலை முதலே திருமண மண்டபம் முன்பு நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர். நேற்று ஒரே நாளில் மேலும் 3,000-க்கும் அதிகமான புகார்கள் போலீசாரிடம் அளிக்கப்பட்டன. நேற்று இரவு வரை சுமார் 8 ஆயிரம் பேர் புகார்கள் செய்ததாக கூறப்படுகிறது. பெங்களூரு தவிர கர்நாடகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து வந்தவர்களும் மன்சூர்கான் மீது புகார்கள் அளித்தனர். இந்த புகார்களின் அடிப்படையில் பார்க்கும்போது மோசடி தொகையின் மதிப்பானது ரூ.1,200 கோடியை தாண்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையே, நகைக்கடை நடத்தி மன்சூர்கான் மோசடி செய்த வழக்கு விசாரணையை சிறப்பு விசாரணை குழுவிடம் ஒப்படைத்து முதல்-மந்திரி குமாரசாமி நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த டுவிட்டர் பதிவில், ‘நகைக்கடையில் பணம் செலுத்தி மோசடியால் பாதிக்கப்பட்ட வழக்கு விசாரணை சிறப்பு விசாரணை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. வழக்கு விசாரணை தொடர்பாக போலீஸ் டி.ஜி.பியிடம் அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன’ என்றார்.


Next Story