அம்மையார்குப்பம் கிராமத்தில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
அம்மையார்குப்பம் கிராமத்தில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த அம்மையார்குப்பம் ஊராட்சியை சேர்ந்த இந்திரா நகரில் 200–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு மாத காலமாக இந்த பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நேற்று காலை அம்மையார்குப்பம் கிராம அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஆர்.கே.பேட்டை போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். டிராக்டர்கள் மூலம் குடிநீர் வழங்குவதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். மறியல் காரணமாக அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.