குன்றத்தூர் அருகே தனியார் நிறுவனத்தில் 2½ டன் தாமிர கம்பிகள் திருட்டு
குன்றத்தூர் அருகே தனியார் நிறுவனத்தில் 2½ டன் தாமிர கம்பிகள் திருடப்பட்டது.
பூந்தமல்லி,
குன்றத்தூரை சேர்ந்தவர் அயூப் (வயது 40). இவர் குன்றத்தூரை அடுத்த கொல்லச்சேரி பகுதியில் தனியார் நிறுவனங்களில் உபயோகப்படுத்தப்பட்ட தாமிர கம்பிகளை மொத்தமாக வாங்கி வந்து அதனை தரம் பிரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு நிறுவனத்தை மூடி விட்டு சென்றுவிட்டார். நேற்று காலை வந்து பார்த்தபோது நிறுவனத்தின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
நிறுவனத்திற்கு சொந்தமான மினி லாரி மற்றும் தாமிர கம்பிகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொள்ளை நடந்த நிறுவனத்தை சோதனை செய்தனர். நிறுவனத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கு நிறுத்தி வைத்திருந்த மினி லாரியில் டீசல் குறைவாக இருந்ததால் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு லாரியின் டீசல் டேங்கை திறந்து அதில் இருந்த டீசலை எடுத்து மினி லாரியில் ஊற்றி 2½ டன் தாமிரகம்பிகளுடன் தப்பிச்சென்றுள்ளனர்.
நிறுவனத்தில் இருந்த மடிக்கணினி மற்றும் கண்காணிப்பு கேமராவில் காட்சிகள் பதிவாகும் கம்ப்யூட்டர் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
மேலும் மர்ம நபர்கள் போலீசாரிடம் சிக்காமல் இருக்க கண்காணிப்பு கேமரா இணைப்பை துண்டித்துள்ளனர். கொள்ளை போன பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.12 லட்சம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த நிறுவனத்தில் வேலை செய்தவர்களே இந்த கொள்ளையில் ஈடுபட்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.