பிவண்டியில் கடத்தப்பட்ட 1 வயது சிறுவன் உத்தரபிரதேசத்தில் மீட்பு : வாலிபர் கைது


பிவண்டியில் கடத்தப்பட்ட 1 வயது சிறுவன் உத்தரபிரதேசத்தில் மீட்பு : வாலிபர் கைது
x
தினத்தந்தி 13 Jun 2019 4:45 AM IST (Updated: 13 Jun 2019 2:30 AM IST)
t-max-icont-min-icon

பிவண்டியில் தாயுடன் தூங்கி கொண்டு இருந்தபோது கடத்தப்பட்ட 1 வயது சிறுவன் உத்தரபிரதேசத்தில் மீட்கப்பட்டான். அவனை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தானே,

உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் சந்துல். அண்மையில் இவர் வேலை தேடி மும்பைக்கு குடும்பத்துடன் வந்தார். வாடகைக்கு வீடு பிடிக்க போதிய பணம் இல்லாததால் சந்துல் குடும்பத்துடன் பிவண்டி, தமன்கர் நாக்கா பாலத்துக்கு கீழ் தங்கி இருந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன் சந்துல் உள்பட குடும்பத்தினர் பாலத்தின் கீழ் தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது சந்துலின் மனைவி எழுந்த போது அருகில் தூங்கி கொண்டு இருந்த 1 வயது மகன் ஆசிக்கை காணவில்லை, இதனால் திடுக்கிட்ட அவர் சிறுவனை அந்த பகுதியில் தேடிப்பார்த்தார். எங்கு தேடியும் அவனை கண்டுபிடிக்க முடியாததால் போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலம் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது வாலிபர் ஒருவர் சிறுவன் ஆசிக்கை கடத்தி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

விசாரணையில், அந்த வாலிபர் பிவண்டியை சேர்ந்த ரோகித் கோட்டேகர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கீழ்க்கண்ட தகவல்கள் தெரியவந்தன.

பிவண்டி பத்மாநகரை சேர்ந்தவர் சூரத் சோனி. இவருக்கு அதிகளவில் கடன் சுமை இருந்து உள்ளது. கடனை அடைக்க முடியாமல் தவித்து வந்தார். இந்த நிலையில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒரு தம்பதி குழந்தையை தத்தெடுத்து வளர்க்க விரும்புவதை அறிந்தார்.

கடனை அடைக்க தனக்கு பணம் தேவை என்பதால் அவர் ஏதாவது ஒரு குழந்தையை கடத்த திட்டமிட்டார். அதன்படி அவர் ரோகித் கோட்டேகர் மூலம் சந்துலின் மகன் ஆசிக்கை கடத்தினார்.

பின்னர் குழந்தையை மேற்படி உத்தரபிரதேசத்தை சேர்ந்த தம்பதியிடம் விற்று பணம் வாங்கினார் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் உத்தரபிரதேசம் சென்று சிறுவன் ஆசிக்கை மீட்டனர். மேலும் தலைமறைவான சூரத் சோனியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story