திருச்சி விமானத்தில் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு புறப்பட்ட இடத்திற்கே திரும்பி சென்றதால் 152 பயணிகள் உயிர் தப்பினர்


திருச்சி விமானத்தில் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு புறப்பட்ட இடத்திற்கே திரும்பி சென்றதால் 152 பயணிகள் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 13 Jun 2019 11:00 PM GMT (Updated: 13 Jun 2019 7:35 PM GMT)

திருச்சி விமானத்தில் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் புறப்பட்ட இடத்திற்கே விமானம் திரும்பி சென்றதால் 152 பயணிகள் உயிர் தப்பினர்.

செம்பட்டு,

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு ஏர் ஏசியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் தினந்்தோறும் இந்திய நேரப்படி மலேசியாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 11.45 மணிக்கு திருச்சியை வந்தடையும். பின்னர் இங்கிருந்து நள்ளிரவு 12.15 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு இந்திய நேரப்படி 8.20 மணிக்கு கோலாலம்பூரில் இருந்து புறப்பட்டு திருச்சி நோக்கி அந்த விமானம் வந்து கொண்டிருந்தது. அதில் 152 பயணிகள் பயணம் செய்தனர்.

விமானம் புறப்பட்ட சுமார் 1 மணி நேரத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென்று விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனை அறிந்த விமானி உடனடியாக மலேசியாவில் உள்ள விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

அங்கிருந்து வந்த உத்தரவின்படி, அந்த விமானம் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி சென்று பத்திரமாக தரையிறங்கியது. பின்னர், அதில் இருந்த பயணிகள் மாற்று விமானம் மூலம் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த விமானம் நேற்று அதிகாலை 3.45 மணிக்கு திருச்சியை வந்தடைந்தது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை தக்க நேரத்தில் கண்டுபிடித்ததோடு விமானத்தை சாமர்த்தியமாக விமானி தரையிறக்கியதால் 152 பயணிகள் உயிர் தப்பினர்.

Next Story