ஒற்றை தலைமை குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு
அ.தி.மு.க.வின் ஒற்றை தலைமை குறித்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஆண்டிப்பட்டியில் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆண்டிப்பட்டி,
அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளராக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கட்சிக்கு அதிகாரமிக்க ஒற்றை தலைமையே வேண்டும் என்று ராஜன்செல்லப்பா கூறிய கருத்து அ.தி.மு.க.வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே தமிழகம் முழுவதும் ஆங்காங்கே எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் ஒற்றை தலைமை குறித்து போஸ்டர்கள், பேனர்கள் வைத்தனர். இதுதவிர கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அ.தி.மு.க.விற்கு தலைமை ஏற்க வேண்டும் என்று அவருடைய ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டினர். இதன்காரணமாக அ.தி.மு.க. கட்சியில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அ.தி.மு.க. தலைமை குறித்து கட்சியினர் யாரும் பேசக்கூடாது என்று அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டனர்.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி நகர் பகுதியில் அவருடைய ஆதரவாளர்கள் ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஒட்டிய இந்த போஸ்டரால் ஆண்டிப்பட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் ஜெயலலிதாவால் 3 முறை முதல்வராக்கிய ஓ.பன்னீர்செல்வம் அவர்களே, கட்சியையும், ஆட்சியையும் தலைமை ஏற்க வாருங்கள், இதுவே 1½ கோடி தொண்டர்களின் விருப்பம் என்றும், இவண் தர்மயுத்த தொண்டர்கள் என்றும் அதில் வாசகங்கள் இடம் பெற்று உள்ளன. ஒற்றை தலைமை குறித்து யாரும் கருத்து தெரிவிக்க கூடாது என்று அறிவித்த போதிலும் ஆண்டிப்பட்டியில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர் அ.தி.மு.க.வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story