ஜிந்தால் நிறுவனத்திற்கு நிலம் விற்பனை செய்யும் முடிவை கண்டித்து பா.ஜனதாவினர் தொடர் தர்ணா போராட்டம் - பெங்களூருவில் தொடங்கியது


ஜிந்தால் நிறுவனத்திற்கு நிலம் விற்பனை செய்யும் முடிவை கண்டித்து பா.ஜனதாவினர் தொடர் தர்ணா போராட்டம் - பெங்களூருவில் தொடங்கியது
x
தினத்தந்தி 14 Jun 2019 10:15 PM GMT (Updated: 14 Jun 2019 8:21 PM GMT)

ஜிந்தால் நிறுவனத்திற்கு நிலம் விற்பனை செய்யும் முடிவை கண்டித்து எடியூரப்பா தலைமையில் பா.ஜனதாவினரின் தொடர் தர்ணா போராட்டம் தொடங்கியது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பல்லாரியில் உள்ள ஜிந்தால் நிறுவனத்திற்கு கர்நாடக அரசு 3,667 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதற்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மாநில அரசின் முடிவை கண்டித்து கர்நாடக பா.ஜனதா சார்பில் 2 நாள் தொடர் தர்ணா போராட்டம் பெங்களூருவில் உள்ள அனந்தராவ் சர்க்கிளில் நேற்று காலை தொடங்கியது.

அக்கட்சியின் தலைவர் எடியூரப்பா தலைமையில் தொடங்கியுள்ள இந்த போராட்டத்தில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் எடியூரப்பா பேசியதாவது:-

கர்நாடகத்தில் நீர்ப்பாசன திட்டங்கள் மற்றும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பா.ஜனதா நேரில் ஆய்வு செய்தது. இதனால் மாநில அரசு விழித்தெழுந்து, செயல்பட தொடங்கியுள்ளது.

ஜிந்தால் நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்க முடிவு செய்திருப்பதை பா.ஜனதா கடுமையாக எதிர்க்கிறது. இதனால் அந்த முடிவை மறுபரிசீலனை செய்வதாக முதல்-மந்திரி கூறியிருக்கிறார். மக்களின் கஷ்டங்களுக்கு உதவி செய்யாத மாநில அரசுக்கு எதிராக பா.ஜனதா தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது.

இந்த கூட்டணி அரசு கவிழும் வரை பா.ஜனதா போராட்டம் நடத்தாமல் இருந்தால், மக்கள் நிம்மதியாக இருக்க முடியாது. ஜிந்தால் நிறுவனத்திற்கு நிலம் வழங்கும் முடிவின் பின்னணியில் பெரிய அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் கூட்டணி அரசு தோல்வி அடைந்துவிட்டது. இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

இதைதொடர்ந்து கட்சியின் மூத்த தலைவர் ஈசுவரப்பா பேசுகையில், “மாநிலத்தின் சொத்து மீட்கும் வரை பா.ஜனதாவின் இந்த போராட்டம் நீடிக்கும். தனியார் நகைக்கடை மோசடி வழக்கில் மந்திரி ஜமீர்அகமதுகான், ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ. 2 பேரையும் கைது செய்ய வேண்டும்” என்றார்.

அதைத்தொடர்ந்து பேசிய மூத்த தலைவர் ஆர்.அசோக், “ஜிந்தால் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிலத்தின் குத்தகை காலத்தை நீட்டிக்க நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம். ஆனால் 3,667 ஏக்கர் நிலத்தை அந்த நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் முடிவின் பின்னணியில் தவறுகள் நடந்துள்ளன” என்றார்.


Next Story