திருச்சியில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவியை குத்திக்கொன்ற ஐ.டி. நிறுவன ஊழியர் கைது


திருச்சியில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவியை குத்திக்கொன்ற ஐ.டி. நிறுவன ஊழியர் கைது
x
தினத்தந்தி 16 Jun 2019 3:45 AM IST (Updated: 16 Jun 2019 1:05 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவியை குத்திக்கொன்ற ஐ.டி. நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

திருச்சி தென்னூர் அண்ணாநகரை சேர்ந்தவர் அய்யப்பன். இவர் புதிய தமிழகம் கட்சியில் தேர்தல் பணிக்குழு மாநில பொறுப்பாளராக உள்ளார். இவரது மகள் மலர்விழி மீரா(வயது 20). இவர் திருச்சியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்ற மலர்விழி மீராவை அதேபகுதியை சேர்ந்த பால முரளி கார்த்திக் (34) கத்தியால் சரமாரியாக குத்தி படுகொலை செய்தார்.

சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வரும் பாலமுரளி கார்த்திக் ஏற்கனவே திருமணமானவர். இவர் மலர்விழி மீராவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அவரது காதலை ஏற்காததால் ஆத்திரம் அடைந்து அவரை படுகொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தை கண்ட அந்த பகுதியினர் பாலமுரளி கார்த்திக்கை சரமாரியாக தாக்கினார்கள். இதனையடுத்து அவரை தில்லைநகர் போலீசார் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஐ.டி. நிறுவன ஊழியர் கைது

இதற்கிடையே கொலை செய்யப்பட்ட மலர்விழி மீரா உடல் திருச்சி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அரங்கில் வைக்கப்பட்டது. மலர்விழி மீராவின் உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டு இருந்தனர். இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

நேற்று காலை பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஐ.டி. நிறுவன ஊழியர் பாலமுரளி கார்த்திக்கை தில்லைநகர் போலீசார் கைது செய்தனர். சிகிச்சைக்கு பிறகு அவர் சிறையில் அடைக்கப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story