நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற குமாரசாமி, பிரதமர் மோடியுடன் சந்திப்பு


நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற குமாரசாமி, பிரதமர் மோடியுடன் சந்திப்பு
x
தினத்தந்தி 15 Jun 2019 11:15 PM GMT (Updated: 15 Jun 2019 9:31 PM GMT)

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற முதல்-மந்திரி குமாரசாமி பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

பெங்களூரு,

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற முதல்-மந்திரி குமாரசாமி நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது கர்நாடகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை ரூ.2 ஆயிரம் கோடியை உடனே வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பங்கேற்க முதல்-மந்திரி குமாரசாமி டெல்லி சென்றுள்ளார். இந்த நிலையில், கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, நேற்று காலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முதல்-மந்திரி குமாரசாமி சந்தித்து பேசினார்.

அப்போது நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்றதற்கும், 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்று இருப்பதற்கும் பிரதமர் மோடிக்கு பூச்செண்டு கொடுத்து குமாரசாமி வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது மாநிலத்தில் நிலவும் வறட்சி குறித்து பிரதமரிடம் குமாரசாமி விளக்கமாக எடுத்து கூறினார்.

குறிப்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி நிதியை கர்நாடகத்துக்கு வழங்காமல் பாக்கி வைத்துள்ளது. அந்த நிலுவைத்தொகை ரூ.2 ஆயிரம் கோடியை உடனடியாக கர்நாடகத்துக்கு வழங்க வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் படியும் பிரதமர் மோடியிடம் முதல்-மந்திரி குமாரசாமி கேட்டுக் கொண்டார்.

மேலும் மத்திய அரசு பாக்கி வைத்துள்ள ரூ.2 ஆயிரம் கோடியை எந்த விதமான காலதாமதமும் இல்லாமல் கர்நாடக அரசுக்கு வழங்க வேண்டும் என்று கோரி அவர் பிரதமரிடம் ஒரு கோரிக்கை மனுவும் கொடுத்தார். அந்த மனுவை பிரதமர் பெற்றுக் கொண்டார். பின்னர் அங்கிருந்து முதல்-மந்திரி குமாரசாமி புறப்பட்டு வந்தார்.

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிறகு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனையும் முதல்-மந்திரி குமாரசாமி சந்தித்து பேசினார். மேலும் மத்திய நிதி மந்திரியாக பதவி ஏற்றுள்ள நிர்மலா சீதாராமனுக்கு குமாரசாமி பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

அத்துடன் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல் படுத்தி வரும் பல்வேறு திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு வழங்காமல் உள்ளதாகவும், அந்த நிதியை வழங்க நடவடிக்கை எடுக்கும்படி நிர்மலா சீதாராமனிடம் குமாரசாமி கேட்டுக் கொண்டார்.


Next Story