மாதவரம் போலீஸ் குடியிருப்பில் கைவரிசை சப்–இன்ஸ்பெக்டர் வீட்டின் பூட்டை உடைத்து நகை–பணம் கொள்ளை


மாதவரம் போலீஸ் குடியிருப்பில் கைவரிசை சப்–இன்ஸ்பெக்டர் வீட்டின் பூட்டை உடைத்து நகை–பணம் கொள்ளை
x
தினத்தந்தி 16 Jun 2019 10:15 PM GMT (Updated: 16 Jun 2019 5:40 PM GMT)

மாதவரத்தில் போலீஸ் குடியிருப்பில் சப்–இன்ஸ்பெக்டர் வசித்து வந்த வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை–பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த சோழவரம் திருநிலை கிராமத்தைச் சேர்ந்தவர் கோதண்டபாணி (வயது 51). இவர் செம்பியம் போக்குவரத்து போலீசில் சப்–இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருகிறார். இவர் மாதவரம் போலீஸ் குடியிருப்பில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 13–ந் தேதி அன்று கோதண்டபாணி தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்று விட்டார்.

பிறகு நேற்று காலை வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், உள்ளே சென்று பார்த்த போது, மர்ம ஆசாமிகள் பீரோவில் இருந்த 13 பவுன் தங்க நகைகளையும் ஆயிரம் ரூபாயையும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து கோதண்டபாணி மாதவரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story