திருச்சி விமான நிலையத்தில் ரூ.2¼ கோடி கடத்தல் தங்கம், செல்போன்கள் பறிமுதல் 7 பேர் கைது


திருச்சி விமான நிலையத்தில் ரூ.2¼ கோடி கடத்தல் தங்கம், செல்போன்கள் பறிமுதல் 7 பேர் கைது
x
தினத்தந்தி 18 Jun 2019 4:30 AM IST (Updated: 18 Jun 2019 1:07 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி விமான நிலையத்தில் ரூ.2¼ கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இதுதொடர்பாக 7 பேரை கைது செய்தனர்.

செம்பட்டு,

சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானமும், துபாயில் இருந்து ஏர் இந்தியா விமானமும் சம்பவத்தன்று திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. இதில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் கோவையை சேர்ந்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின் போது, சில பயணிகள் தங்கத்தை நகைகளாகவும், கட்டிகளாகவும், தகடுகளாகவும் மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சிலர் பிரபல நிறுவனங்களின் ஸ்மார்ட் செல்போன், ஐபோன்கள், ஏர்பேட்ஸ், ஸ்மார்ட் கெடிகாரங்கள், மெமரிகார்டுகள், கணினி உதிரிபாகங்கள் போன்றவற்றையும் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக சித்துமுருகன், ஜவகர், சித்திக், சையது சுல்தான், முகமதுபர்வேஸ், ஹதர்கான், சல்மான்கான் ஆகிய 7 பேரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.36 லட்சம் மதிப்பிலான தங்கத்தையும், ரூ.1 கோடியே 54 லட்சத்து 61 ஆயிரம் மதிப்பிலான ஸ்மார்ட் செல்போன், ஐபோன்கள், ஏர்பேட்ஸ், ஸ்மார்ட் கெடிகாரங்கள், மெமரிகார்டுகள், கணினி உதிரிபாகங்கள் போன்றவற்றையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் நேற்று காலை சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகளிடம் திருச்சி வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, தொண்டியை சேர்ந்த முகமது ரபீக், முகம்மது ரிகா மற்றும் எஸ்.பி.பட்டினத்தை சேர்ந்த முகமது முஸ்தபா, முகமது ஹஷீர் ஆகிய 4 பேர் தங்கள் உடலில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

4 பேரிடம் இருந்தும் மொத்தம் ஒரு கிலோ 100 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.37 லட்சம் ஆகும். மேலும் 4 பேரிடமும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மொத்தத்தில் திருச்சி விமான நிலையத்தில் ரூ.2¼ கோடி மதிப்பிலான தங்கம், செல்போன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Next Story