அரசு கல்லூரியில் 11 பாடப்பிரிவுகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் நிறுத்தப்பட்டதை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல்


அரசு கல்லூரியில் 11 பாடப்பிரிவுகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் நிறுத்தப்பட்டதை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 18 Jun 2019 4:15 AM IST (Updated: 18 Jun 2019 1:26 AM IST)
t-max-icont-min-icon

குரும்பலூர் அரசு கலை- அறிவியல் கல்லூரியில் 11 பாடப்பிரிவுகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் நிறுத்தப்பட்டதை கண்டித்து மாணவ- மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக தமிழக அரசால் தரம் உயர்த்தப்பட்டு, இந்த கல்வி ஆண்டு முதல் இயங்கி வருகிறது. பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியாக இருந்தபோது கூட இளநிலை பிரிவுகளில் 14 பாடப்பிரிவுகளுக்கும், முதுகலை பிரிவுகளில் எம்.ஏ. தமிழ், ஆங்கிலம், எம்.காம், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்.டபுள்யூ (சமூகப்பணி) ஆகிய 6 பாடப்பிரிவுகளுக்கு வகுப்புகளும் நடந்தன. ஆராய்ச்சி பட்ட மேற்படிப்புகளான தமிழ், ஆங்கிலம், கணிதம், உயிர்த்தொழில் நுட்பவியல், நுண்ணுயிரியல், சமூகப்பணி, வணிகவியல், மேலாண்மையியல் ஆகியவைக்கும் வகுப்புகளும் நடந்தன.

11 பாடப்பிரிவுகளுக்கான வகுப்புகள் நிறுத்தம்

இந்நிலையில் 14 இளநிலை பாடப்பிரிவுகளில் பி.எஸ்.சி. நுண்ணுயிரியல், பி.சி.ஏ., பி.ஏ. வரலாறு, பி.ஏ. சுற்றுலா மற்றும் பயண மேலாண்மையியல், பி.எஸ்.டபுள்யூ (சமூகப்பணி) ஆகிய 5 பாடப்பிரிவுகளுக்கு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வினியோகித்தும், அந்த பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்திருந்த மாணவ- மாணவிகளுக்கு கலந்தாய்வு நடக்கவில்லை. இதனால் அந்த 5 இளநிலை பாடப்பிரிவுகளுக்கான முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கப்படாது என்றும், முதுகலை பிரிவுகளில் எம்.ஏ. தமிழ், ஆங்கிலம், எம்.காம், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்.டபுள்யூ (சமூகப்பணி) ஆகிய 6 பாடப்பிரிவுகளுக்கு வகுப்புகளுக்கும் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்படாது என்றும் கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக தரம் உயர்ந்த நிலையில், ஏற்கனவே அந்த கல்லூரியில் கற்பிக்கப்பட்ட 5 இளநிலை பாடப்பிரிவுகளுக்கான வகுப்புகளும், 6 முதுகலை பாடப்பிரிவுகளுக்கான வகுப்புகள் என மொத்தம் 11 பாடப்பிரிவுகளுக்கான வகுப்புகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் நிறுத்தப்பட்டது. இது ஏழை, எளிய மாணவ- மாணவிகளின் உயர்கல்வியை பாதிக்கும். எனவே தமிழக அரசு நிறுத்தப்பட்ட பாடப்பிரிவுகளுக்கான வகுப்புகளை மீண்டும் தொடங்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், கல்வியாளர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

சாலை மறியல்

இந்நிலையில் குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2019-20-ம் கல்வியாண்டின் 2, 3-ம் ஆண்டு மாணவ- மாணவிகளுக்கான வகுப்புகள் நேற்று தொடங்கியது. இதனால் நேற்று கல்லூரிக்கு வந்த மாணவ- மாணவிகள் தங்களது வகுப்புகளுக்கு செல்லாமல் கல்லூரி முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் கல்லூரியில் நிறுத்தப்பட்ட 5 இளநிலை பாடப்பிரிவுகளையும், 6 முதுகலை பாடப்பிரிவுகளையும் மீண்டும் தமிழக அரசு தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திடீரென்று பெரம்பலூர்- துறையூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது மாணவ- மாணவிகள் நிறுத்தப்பட்ட மொத்தம் 11 பாடப்பிரிவுகளுக்கான வகுப்புகளை மீண்டும் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி பல்வேறு கோ‌‌ஷங்களை எழுப்பினர்.

பேச்சுவார்த்தை

இந்த சாலை மறியல் போராட்டத்தால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் விரைந்து வந்து கல்லூரி மாணவ- மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே வந்த கல்லூரி பேராசிரியர்களும் மாணவ- மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தற்போது நிறுத்தப்பட்டுள்ள அந்த இளநிலையில் 5 பாடப்பிரிவுகளுக்கும், 6 முதுகலை பாடப்பிரிவுகளுக்கும் கல்லூரியில் மீண்டும் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பிலும் கோரிக்கை விடுத்துள்ளோம். இதனால் விரைவில் நிறுத்தப்பட்டுள்ள பாடப்பிரிவுகளுக்கு வகுப்புகள் தொடங்கபடலாம் என்றனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் மறியலை கைவிட்டு மாணவ- மாணவிகள் வகுப்புகளுக்கு சென்றனர். இதையடுத்து சுமார் 1 மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்தினை போலீசார் ஒழுங்குபடுத்தினர். கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ- மாணவிகளுக்கான வகுப்புகள் வருகிற 21-ந் தேதி தேதி காலை 10 மணிக்கு தொடங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story