வாலிபர் அடித்து கொலை: மதுரை பெரிய ஆஸ்பத்திரி முன்பு உறவினர்கள் மறியல்
அடித்து கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை வாங்க மறுத்து மதுரை பெரிய ஆஸ்பத்திரி முன்பு உறவினர்கள் திரண்டு மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை,
மேலூர் அருகே கொடுக்கம்பட்டியில் மோட்டார் சைக்கிள்களில் சென்ற 4 வாலிபர்களை வழிமறித்து ஒரு கும்பல் அடித்து, தாக்கியது. இதில் அ.கோவில்பட்டியை சேர்ந்த ராம்பு (வயது 23) என்ற வாலிபர் இறந்துபோனார். மற்ற 3 பேரும் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கொடுக்கம்பட்டியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. அங்கு போலீசாரும் குவிக்கப்பட்டனர். இதற்கிடையே மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் ராம்புவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்தனர். கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை ராம்புவின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் பெரிய ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் வாலிபரின் உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். 200–க்கும் மேற்பட்டவர்கள் மறியலில் ஈடுபட்டதால் பெரிய ஆஸ்பத்திரி, கோரிப்பாளையம் தேவர் சிலை பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து மறியல் குறித்து தகவல் அறிந்த கலெக்டர் (பொறுப்பு) சாந்தகுமார், துணை கமிஷனர் சசிமோகன் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று வாலிபரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து வாலிபரின் உடலை வாங்கி கொண்டு உறவினர்கள் கலைந்து சென்றனர்.
இதற்கிடையே இந்த கொலை வழக்கு தொடர்பாக கொடுக்கம்பட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் உள்பட 14 பேரை கீழவளவு போலீசார் வழக்குப்பதிந்து, அவர்கள் அனைவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.