சென்னை விமான நிலையத்தில் காதலியை வழியனுப்ப போலி டிக்கெட்டுடன் வந்த சீன வாலிபர் கைது


சென்னை விமான நிலையத்தில் காதலியை வழியனுப்ப போலி டிக்கெட்டுடன் வந்த சீன வாலிபர் கைது
x
தினத்தந்தி 20 Jun 2019 4:45 AM IST (Updated: 20 Jun 2019 1:36 AM IST)
t-max-icont-min-icon

சென்னை விமானநிலையத்தில் காதலியை வழியனுப்ப போலி டிக்கெட்டுடன் வந்த சீன வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை விமான நிலையத்தில் உள்ள பன்னாட்டு முனையம் 4–வது நுழைவுவாயிலில் இருந்து நேற்று அதிகாலை சீனாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் வெளியே வர முயன்றார். அப்போது விமான நிலைய பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழிற்படை போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது ஹாங்காங் செல்ல வந்ததாகவும், தற்போது பயணத்தை ரத்து செய்துவிட்டு செல்வதாகவும் கூறினார். ஆனால் அவர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரிடம் இருந்த விமான டிக்கெட்டை வாங்கி பார்த்தனர். அது போலி டிக்கெட் போல இருந்தது. உடனே விமான நிறுவன மையத்தில் ஆய்வு செய்தபோது அது போலி டிக்கெட் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் பிடிபட்ட வாலிபர் சீனாவை சேர்ந்த ஹலில் சீயூ (வயது 29) என்பதும், ஆந்திரமாநிலம் நெல்லூரில் உள்ள ஷூ கம்பெனியில் மேலாளராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

சீனாவில் இருந்து வந்த தனது காதலியை வழியனுப்ப பயணி போல் போலியான விமான டிக்கெட்டை வைத்திருந்ததை ஒப்புக்கொண்டார். காதலியுடன் விமான நிலையத்திற்குள் சென்று சிறிதுநேரம் பேசிவிட்டு, அவரை வழியனுப்பி விட்டு வெளியே வந்தது தெரியவந்தது. இதனையடுத்து சீன வாலிபர் ஹலில் சீயூவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story