மதசார்பற்ற சக்திகளை ஒருங்கிணைத்து நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க ராகுல்காந்தி முயற்சி சஞ்சய்தத் தகவல்


மதசார்பற்ற சக்திகளை ஒருங்கிணைத்து நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க ராகுல்காந்தி முயற்சி சஞ்சய்தத் தகவல்
x
தினத்தந்தி 20 Jun 2019 4:30 AM IST (Updated: 20 Jun 2019 2:32 AM IST)
t-max-icont-min-icon

மதசார்பற்ற சக்திகளை ஒருங்கிணைத்து நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க ராகுல்காந்தி முயற்சி செய்து வருவதாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளருமான சஞ்சய்தத் கூறினார்.

தூத்துக்குடி,

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் 49-வது பிறந்த நாள் விழா தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கலைஞர் அரங்கில் வைத்து கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாநகர காங்கிரஸ் தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளருமான சஞ்சய்தத், தமிழக காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் மயூராஜெயக்குமார், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது. தொடர்ந்து நடந்த ரத்ததான முகாமில் காங்கிரசார் பலர் ரத்ததானம் செய்தனர். கண்தானத்துக்கும் பதிவு செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் தமிழக இளைஞர் காங்கிரஸ் கட்சி முதன்மை பொது செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ், மாநில துணைத்தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டேனியல்ராஜ், சுடலையாண்டி, வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் டேவிட்பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் சஞ்சய்தத் நிருபர்களிடம் கூறியதாவது:

கோடிக் கணக்கான இந்திய மக்களின் நம்பிக்கையை பெற்ற தலைவராக ராகுல் காந்தி உள்ளார். இன்று நாட்டின் ஜனநாயகத்தை, அரசியல் அமைப்பை பாதுகாப்பதில் மிகப்பெரிய சவால் ஏற்பட்டு உள்ளது. அனைத்து ஜனநாயக, மதசார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைத்து நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியல் அமைப்பையும் பாதுகாக்க ராகுல் காந்தி எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணிக்கு மகத்தான வெற்றியை தந்த தமிழக மக்களுக்கு சிறப்பான நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டு உள்ளோம். தமிழகத்தின் வளர்ச்சிக்காக காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து பாடுபடும் என்று உறுதி அளிக்கிறேன்.

தமிழகத்தில் தற்போது பெரிய அளவில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இந்த பிரச்சினையை ஆளும் அ.தி.மு.க அரசு கண்டுகொள்ளாமல் புறக்கணித்து வருகிறது. தமிழகம் முழுவதும் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அவர்களுக்கு அக்கறை இல்லை. குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண அரசு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காததால் தான் தற்போது இந்த பிரச்சினை பூதாகரமாக வெடித்து உள்ளது. மக்கள் பிரச்சினைகளை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை.

சென்னை போன்ற நகரங்களில் கூட கடுமையான குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடியிலும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் இந்த சூழ்நிலையில் மக்களோடு துணை நின்று, மக்கள் பிரச்சினையை புறக்கணிக்கும் அ.தி.மு.க அரசுக்கு எதிராக போராடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story