வில்லியனூர் சங்கராபரணி ஆற்றில் மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்; 31 பேர் கைது


வில்லியனூர் சங்கராபரணி ஆற்றில் மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்; 31 பேர் கைது
x
தினத்தந்தி 20 Jun 2019 3:45 AM IST (Updated: 20 Jun 2019 3:24 AM IST)
t-max-icont-min-icon

வில்லியனூர் சங்கராபரணி ஆற்றில் நள்ளிரவில் போலீசார் நடத்திய வேட்டையின் போது மணல் கடத்தலில் ஈடுபட்ட மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 31 பேர் கைது செய்யப்பட்டனர்.

வில்லியனூர்,

வில்லியனூர் சங்கராபரணி ஆற்றில் தொடர்ந்து மணல் கடத்தல் நடந்து வருகிறது. இதனை தடுக்க 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பையும் மீறி திருட்டு நடக்கிறது. இந்தநிலையில் நேற்று அதிகாலையில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் தலைமையில் மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் மற்றும் போலீசார் வில்லியனூர், ஒதியம்பட்டு சங்கராபரணி ஆற்றுப்பகுதியில் சோதனை நடத்தினார்கள்.

அப்போது ஏராளமானோர் அங்கு வேன், மாட்டு வண்டிகளை கொண்டு வந்து மணல் திருடிக் கொண்டு இருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர். 23 மாட்டு வண்டிகளும், ஒரு மினி வேனும் பறிமுதல் செய்யப்பட்டது. மணல் கடத்தலில் ஈடுபட்ட சுபாஷ், ஜெகன், சதீஷ் குமார், பழனிவேலு, மணிவண்ணன் உள்பட 31 பேர் கைது செய்யப்பட்டனர்.

போலீசார் வேட்டைக்கு செல்லும் வழியில் மணல் திருடிக்கொண்டு வந்தவர்களை ஒவ்வொருவராக மடக்கியும் பிடித்தனர். பிடிபட்டவர்களிடம் இருந்து முதலில் அவரது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மூலம் மற்றவர்களுக்கு பிடிபட்டவர்களிடம் இருந்து தகவல் கொடுக்கப்படுவது துண்டிக்கப்பட்டது. இதனால் போலீஸ் பிடியில் இருந்து மணல் திருடர்கள் யாரும் தப்ப முடியவில்லை.கைது செய்யப்பட்ட அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

காட்டேரிகுப்பம் போலீசார் சப்–இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் சுத்துக்கேணி சங்கராபரணி ஆற்றில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது முள்புதரில் மறைவாக நின்ற லாரியில் சிலர் தலைசுமையாக மணல் திருடிக்கொண்டு இருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். லாரி பறிமுதல் செய்யப்பட்டது. லாரி உரிமையாளர் மற்றும் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story