வேலூர் ஜெயிலில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன், பேட்டரி கைப்பற்றப்பட்டது
வேலூர் ஜெயிலில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் மற்றும் பேட்டரி கைப்பற்றப்பட்டது.
வேலூர்,
வேலூர் தொரப்பாடியில் மத்திய ஆண்கள் ஜெயில் உள்ளது. இங்கு தண்டனை, விசாரணை கைதிகள் என 700–க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு கைதிகள் சிலர் ரகசியமாக செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வப்போது திடீர் சோதனையில் கைதிகளிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சில கைதிகள் கஞ்சா, புகையிலை போன்றவற்றையும் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இதை தடுக்க அவ்வப்போது ஜெயிலில் சிறை காவலர்கள் திடீரென சோதனை நடத்தி, செல்போன், சிம்கார்டு போன்ற பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் சிறையில் கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாக நேற்று முன்தினம் சிறைத்துறைக்கு புகார் சென்றது. இதையடுத்து உடனடி நடவடிக்கை குழுவை சேர்ந்த சிறை காவலர்கள் அதிரடி சோதனையில் இறங்கினர். அப்போது அவர்கள் கைதிகள் அறை உள்பட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.
அதைத்தொடர்ந்து ஜெயில் வளாகத்தில் உள்ள 3–வது கண்காணிப்பு கோபுரம் பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அங்கு மண் தோண்டி மூடப்பட்டதற்கான தடயம் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த சிறை காவலர்கள் அந்த இடத்தை தோண்டி பார்த்தனர். அப்போது அதில் ஒரு செல்போன் மற்றும் செல்போன் பேட்டரி இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறை காவலர்கள் அதை கைப்பற்றி சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், சோதனையில் செல்போன் மற்றும் செல்போன் பேட்டரி மட்டும் கைப்பற்றப்பட்டுள்ளது. அப்படி என்றால் செல்போனை கைதிகள் பயன்படுத்தி வருவது தெரிய வந்துள்ளது. மறைத்து வைத்த கைதிகள் யார் என்று விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.
இதே 3–வது கண்காணிப்பு கோபுரம் அருகே கடந்த மே மாதம் 8–ந் தேதி மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் பேட்டரி ஒன்று கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.