ஓ.என்.ஜி.சி. குழாயில் உடைப்பு: ஆற்றில் கச்சா எண்ணெய் கலந்ததால் பரபரப்பு சீரமைப்பு பணிகள் தீவிரப்படுத்த கோரிக்கை


ஓ.என்.ஜி.சி. குழாயில் உடைப்பு: ஆற்றில் கச்சா எண்ணெய் கலந்ததால் பரபரப்பு சீரமைப்பு பணிகள் தீவிரப்படுத்த கோரிக்கை
x
தினத்தந்தி 20 Jun 2019 11:15 PM GMT (Updated: 20 Jun 2019 7:05 PM GMT)

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் ஆற்றில் கச்சா எண்ணெய் கலந்தது. இதனால் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பனந்தாள்,

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கடந்த 17 ஆண்டுகளாக ஆழ்குழாய் கிணறு அமைத்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு எடுக்கப் படும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை குழாய் மூலம் நாகை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள சேகரிப்பு நிலையத்துக்கு எடுத்து செல்லப்படுகிறது.

கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ந் தேதி கதிராமங்கலம் வன துர்க்கை அம்மன் கோவில் பகுதியில் உள்ள ஓ.என்.ஜி.சி. ஆழ்குழாய்கிணறு அருகே ஓ.என்.ஜி.சி. குழாயில் உடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கதிராமங்கலம் பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எந்த ஆய்வு பணியையும் மேற்கொள்ள கூடாது என்றும் உடனடியாக இங்கிருந்து வெளியேற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். இந்தநிலையில் கதிராமங்கலம் வெள்ளை பிள்ளையார் கோவில் தெருவில் விக்கிரமன் ஆற்றுப்படுகையில் ஓ.என்.ஜி.சி. குழாயில் நேற்று உடைப்பு ஏற்பட்டது. உடைப்பு ஏற்பட்ட பகுதியில் இருந்து கச்சா எண்ணெய் புகையுடன் வெளியேறி விக்ரமன் ஆற்றில் கலந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று கச்சா எண்ணெய் செல்வதை தற்காலிகமாக நிறுத்தி சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். ஓ.என்.ஜி.சி. குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் அசம்பாவிதங்களை தவிர்க்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

ஓ.என்.ஜி.சி. குழாய்கள் பதித்து 17 ஆண்டுகள் ஆன நிலையில் ஆங்காங்கே உடைப்பு ஏற்படுவதை தடுக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story