மாணவர்களுக்கு கல்வியோடு விளையாட்டு, யோகா பயிற்சியும் அளிக்க வேண்டும் முதன்மை கல்வி அதிகாரி பேச்சு


மாணவர்களுக்கு கல்வியோடு விளையாட்டு, யோகா பயிற்சியும் அளிக்க வேண்டும் முதன்மை கல்வி அதிகாரி பேச்சு
x
தினத்தந்தி 21 Jun 2019 4:00 AM IST (Updated: 21 Jun 2019 1:40 AM IST)
t-max-icont-min-icon

மாணவர்களுக்கு கல்வியோடு விளையாட்டு, யோகா பயிற்சியும் அளிக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அதிகாரி வனஜா கேட்டுக் கொண்டார்.

புதுக்கோட்டை,

2019-20-ம் ஆண்டுக்கான புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அளவிலான அனைத்து பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பான பொறுப்பாளர்கள் தேர்வு கூட்டம் புதுக்கோட்டை முதன்மை கல்வி அலுவலகத்தில் உள்ள தேர்வு கூட அரங்கில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

படிப்பு எவ்வளவு முக்கியமோ அதுபோல உடற் பயிற்சி மிகவும் முக்கியம். உடல், உள்ளம், ஆன்மா ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய திறன் சார்ந்த உடற்பயிற்சியினை மாணவர்களுக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் அளிக்க வேண்டும். விளையாட்டு பாடவேளையில் மாணவர்களை விளையாட தலைமை ஆசிரியர்கள் அனுமதிக்க வேண்டும். உடற்கல்வி ஆசிரியர்களை நன்கு பயன்படுத்தி கொண்டு மாணவர்களுக்கு ஒழுங்கு கட்டுப்பாடுகளை போதிக்க வேண்டும்.

யோகா பயிற்சி

வாரத்தில் ஒரு நாள் கூட்டு உடற்பயிற்சி அளிக்க வேண்டும். வருகிற ஜூலை 15-ந் தேதிக்குள் அனைத்து பள்ளிகளும் உடல் தகுதி சோதனை தேர்வை முடித்து அறிக்கை அனுப்ப வேண்டும். உலக யோகா தினத்தை அனைத்து பள்ளிகளும் கடைபிடித்து மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகள் ராகவன், சிவக்குமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தங்கராஜ் மற்றும் அனைத்து உயர்நிலை, மேல்நிலை, மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story