சங்கராபரணி ஆற்றில் மணல் கடத்திய 4 பேர் கைது; மினி வேன், மாட்டு வண்டிகள் பறிமுதல்
வில்லியனூர் அருகே சங்கராபரணி ஆற்றில் மணல் கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
வில்லியனூர்,
வில்லியனூர் சங்கராபரணி ஆற்றில் மணல் எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதையும் மீறி மர்மநபர்கள் மாட்டு வண்டி, டிராக்டர், டிப்பர் லாரிகள் மூலம் மணல் எடுத்து வருகின்றனர். இதை தடுக்க போலீசார், வருவாய்த்துறையினர் தீவிரமாக கண்காணித்து அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் மற்றும் வில்லியனூர் போலீசார் ஒதியம்பட்டு சங்கராபரணி ஆற்றில் மணல் கடத்தலை தடுக்க அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மாட்டு வண்டியில் மணல் கடத்திய 31 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 23 மாட்டு வண்டிகள், ஒரு மினி வேன் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில் வில்லியனூர் அருகே கூடப்பாக்கம் சங்கராபரணி ஆற்றில் மணல் எடுப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேல் உத்தரவின்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு கூடப்பாக்கம் பகுதியில் ரோந்து மேற்கொண்டனர்.
சங்கராபரணி ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்த 4 மாட்டு வண்டிகள் மற்றும் ஒரு மினி வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மாட்டு வண்டி ஓட்டிவந்த கூடப்பாக்கம் காலனியை சேர்ந்த சூர்யா (வயது 19), அய்யப்பன் (26), வினோசேகர் (24), சந்தோஷ் (24) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். தப்பியோடிய மினிவேன் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.