மனைகளை முறைப்படுத்த ஆன்லைன் பதிவு வசதியை ஏற்படுத்தக்கோரி வழக்கு; தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


மனைகளை முறைப்படுத்த ஆன்லைன் பதிவு வசதியை ஏற்படுத்தக்கோரி வழக்கு; தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 25 Jun 2019 4:30 AM IST (Updated: 25 Jun 2019 12:54 AM IST)
t-max-icont-min-icon

மனைகளை முறைப்படுத்த ஆன்லைன் பதிவு வசதியை ஏற்படுத்தக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த மதிவாணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது–

தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத ‘லே–அவுட்’களை உருவாக்கி ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடும் ஏஜெண்ட், புரோக்கர்கள் விதிகளை பின்பற்றாமல் செயல்பட்டு, பொதுமக்களை மோசடி செய்தனர். இதையடுத்து அங்கீகரிக்கப்படாத மனையிடங்கள், வரைபட அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்கள், நிலப்பரப்புகளை பத்திரப்பதிவு செய்வதற்கு ஐகோர்ட்டு தடை விதித்தது. தற்போது 35 சதவீத ‘லே–அவுட்’கள் முறைப்படுத்தப்பட்டுள்ளன. மீதம் உள்ள அங்கீகரிக்கப்படாத பிளாட்டுகள், ‘லே–அவுட்’கள் வரைமுறை செய்யவில்லை.

இந்தநிலையில் அங்கீகரிக்கப்படாத மனைகளை முறைப்படுத்த ஆன்லைனில் விண்ணப்பிக்கும் திட்டம் கடந்த நவம்பர் மாதம் நிறுத்தப்பட்டது. எனவே கடந்த நவம்பர் மாதத்துக்கு முன்னதாக மனைகள் அங்கீகாரம் பெற விண்ணப்பித்தவை பதிவு செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளை சந்திக்கிறார்கள்.

எனவே மனைகள், லே–அவுட்களை முறைப்படுத்த மீண்டும் ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் முறையை நடைமுறைக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், இதுகுறித்து மாநில வீட்டு வசதி மற்றும் ஊரக மேம்பாட்டுத்துறை செயலாளர், நகரமைப்பு திட்ட இயக்குனர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story