உடல் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் குவிந்த மாற்றுத்திறனாளிகள்


உடல் பரிசோதனைக்காக கோவில்பட்டி  அரசு ஆஸ்பத்திரியில் குவிந்த மாற்றுத்திறனாளிகள்
x
தினத்தந்தி 25 Jun 2019 10:15 PM GMT (Updated: 25 Jun 2019 6:48 PM GMT)

கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் உடல் பரிசோதனைக்காக மாற்றுத்திறனாளிகள் குவிந்தனர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் செவ்வாய்க்கிழமைதோறும் மதியம் 12 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் பரிசோதனை செய்யப்படும். அப்போது மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்பட்டுள்ள ஊனத்தின் பாதிப்பு எத்தனை சதவீதம்? என கண்டறிந்து சான்றிதழ் வழங்குவார்கள். அதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் உதவித்தொகை, உபகரணங்கள், நலத்திட்ட உதவிகள் பெற ஏற்பாடு செய்யப்படும்.

இதையொட்டி கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று காலையில் இருந்தே ஏராளமான மாற்றுத்திறனாளிகள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். இதற்கிடையே மதியம் 12 மணியைக் கடந்தும், மாற்றுத்திறனாளிகளை பரிசோதிக்க டாக்டர்கள் வரவில்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன், அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் கமலவாசனிடம் முறையிட்டார். அப்போது அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால், மதியம் 12 மணியைக் கடந்தும் உள்நோயாளிகள், வெளிநோயாளிகளுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும், அவர்களுக்கு சிகிச்சை அளித்த பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கு உடனே பரிசோதனை நடத்தப்படும் என்று டாக்டர் கமலவாசன் தெரிவித்தார்.

பின்னர் சிறிதுநேரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு டாக்டர்கள் சிந்தன், பாலசுப்பிரமணியன், சரவண வித்யா உள்ளிட்ட குழுவினர் பரிசோதனை நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

Next Story