சமயபுரத்தில் பயங்கரம் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற தொழிலாளி கொலை; கணவர் கைது


சமயபுரத்தில் பயங்கரம் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற தொழிலாளி கொலை; கணவர் கைது
x
தினத்தந்தி 26 Jun 2019 5:00 AM IST (Updated: 26 Jun 2019 1:02 AM IST)
t-max-icont-min-icon

சமயபுரத்தில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற தொழிலாளியை கொலை செய்த அவருடைய கணவரை போலீசார் கைது செய்தனர்.

சமயபுரம்,

சமயபுரம் ராசையன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜய்(வயது 22). கூலித் தொழிலாளி. இவருடைய உறவினரான சமயபுரம் அண்ணாநகரை சேர்ந்த கூலித் தொழிலாளி ஆனந்த்(40), விஜயின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார். இதனால் விஜயின் மனைவி மீது அவருக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. அவரை எப்படியாவது அடையவேண்டும் என்று ஆனந்த் மனதுக்குள் திட்டம் தீட்டி வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் விஜயும், ஆனந்தும் சமயபுரம் நால்ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தினர். பின்னர் விஜய் வீட்டிற்கு செல்லாமல் வேறு இடத்துக்கு சென்றுவிட்டார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஆனந்த், விஜயின் வீட்டுக்கு சென்று அவருடைய மனைவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தனது கணவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். உடனே ஆனந்த் பயந்து, அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். பின்னர் வீட்டிற்கு வந்த விஜயிடம் அவருடைய மனைவி நடந்த விவரங்களை கூறி, கதறி அழுதுள்ளார். இதை பார்த்து ஆத்திரம் அடைந்த விஜய், ஆனந்தை தீர்த்துக்கட்டு வதற்காக அவரை தேடி கடை வீதிக்கு சென்றார்.

அப்போது, டாஸ்மாக் கடை அருகே ஆனந்த் படுத்து இருந்தார். இதை பார்த்த அவர், அங்கிருந்த அம்மிக் கல்லை எடுத்து ஆனந்தின் தலையில் போட்டார். இதில் பலத்த காயம் அடைந்த ஆனந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து விஜய் சமயபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்து நடந்த விவரங்களை கூறினார்.

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர், ஆனந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜயை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கொலை செய்யப்பட்ட ஆனந்துக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story