திருச்சி மாநகராட்சி பகுதியில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட பணிகள்


திருச்சி மாநகராட்சி பகுதியில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட பணிகள்
x
தினத்தந்தி 25 Jun 2019 10:15 PM GMT (Updated: 25 Jun 2019 8:32 PM GMT)

திருச்சி மாநகராட்சி பகுதியில் கோடிக்கணக் கான ரூபாய் செலவில் நடந்து வரும் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப்பணிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

திருச்சி,

கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ந் தேதி மத்திய அரசால் சீர்மிகு நகர (ஸ்மார்ட் சிட்டி) திட்டம் தொடங்கப்பட்டது. 5 வருட காலத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து 100 நகரங்களை சீர்மிகு நகரங்களாக்க மத்திய அரசு தேர்வு செய்தது. அதில் தமிழகத்தில் 11 நகரங்கள் சீர்மிகு நகர திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டன. உலகத்தரம் வாய்ந்த நகரங்களை மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் தேவைகளுக்கேற்ப உருவாக்குவதே சீர்மிகு நகரத்திட்டத்தின் நோக்கமாகும்.2017- 2018-ம் ஆண்டில், மத்திய அரசு இந்திய அளவில் 30 நகரங்களை தேர்வு செய்தது. அதில் தமிழ்நாட்டிலிருந்து 4 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டதில், திருச்சி மாநகராட்சியும் ஒன்றாகும். திருச்சி மாநகராட்சியில் முக்கிய திட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை வருமாறு:-

புதை வடிகால் திட்டம்

*பூங்காக்கள் அபிவிருத்திப் பணி (16 பூங்காக்கள் மற்றும் 5 போக்குவரத்து திட்டு அழகு படுத்தும் பணி) ரூ.15 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டிலும், தில்லைநகர் 7-வது குறுக்குத்தெரு பகுதியில் புதிய வணிக வளாகம் கட்டும் பணி ரூ.15 கோடி மதிப்பீட்டிலும், புதை வடிகால் திட்டம்- பங்களிப்பு (திட்டம்-2, திட்டம்-3) ரூ.65 கோடியே 61 லட்சம் மதிப்பீட்டிலும் நடந்து வருகிறது.

*அரியமங்கலம் குப்பை கிடங்கு பிரச்சினைக்கு விஞ்ஞான முறையில் தீர்வு காணும் பணி ரூ.49 கோடியிலும், உய்யகொண்டான் கால்வாய் கரையை மேம்படுத்தும் பணி ரூ.17 கோடியே 56 லட்சத்திலும், தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றம் செய்யும் பணி ரூ.23 கோடியே 40 லட்சத்திலும், சத்திரம் பஸ் நிலையத்தை மேம்படுத்தும் பணி ரூ.17 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டிலும் நடந்து வருகிறது.

சூரிய ஒளி மின் நிலையம்

* மேலும், ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்க ரூ.30 கோடி, பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணிக்கு ரூ.19 கோடியே 70 லட்சம், பஞ்சப்பூர் பகுதியில் தரைமட்ட சூரிய ஒளி மின் நிலையம் அமைக்க ரூ.13 கோடியே 50 லட்சம், அரசு அலுவலக கட்டிடங்களில் சூரிய ஒளி மேற்கூரை அமைக்கும் பணிக்கு ரூ.6 கோடியே 44 லட்சம் என ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கி உள்ளன. காந்திமார்க்கெட் பகுதியில் போர் நினைவுச்சின்னத்தினை மின் விளக்குகளால் ஒளிரச்செய்யும் பணி ரூ.99 லட்சத்து 99 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது.

*சுற்றுலா வளர்ச்சி பணி களான மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் ஒலி-ஒளி காட்சி அமைக்கும் பணி, மெயின்கார்டுகேட் நுழைவு வாயிலினை வண்ண மின்விளக்குகளால் ஒளிரச்செய்யும் பணி, மலைக்கோட்டையை மின்விளக்குகளால் ஒளிரச்செய்யும் பணி மற்றும் புராதன பூங்கா அமைக்கும் பணிக்காக ரூ.38 கோடியே 19 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் புத்தூர் தினசரி சந்தையில் புதிய வணிக வளாகம் கட்டும் பணி ரூ.20 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story