சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது என அறிவுறுத்தல்: டைரக்டர் பா.ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் மதுரை ஐகோர்ட்டு வழங்கியது


சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது என அறிவுறுத்தல்: டைரக்டர் பா.ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் மதுரை ஐகோர்ட்டு வழங்கியது
x
தினத்தந்தி 25 Jun 2019 10:30 PM GMT (Updated: 2019-06-26T02:55:18+05:30)

ராஜராஜசோழன் பற்றி சர்ச்சை ஏற்படுத்தும் விதமாக விமர்சித்த சினிமா டைரக்டர் பா.ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களை இயக்கிய டைரக்டர் பா.ரஞ்சித் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

கடந்த 5–ந்தேதி தஞ்சாவூரில் நீலப்புலிகள் அமைப்பின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினேன். அதில் ராஜராஜசோழன் பற்றி சிலவற்றை குறிப்பிட்டேன். அவரது ஆட்சியில் டெல்டா பகுதியில் நிலம் இல்லாதவர்கள் நடத்தப்பட்டது குறித்த உமர் பாரூக்கின் ‘செந்தமிழ்நாட்டு சேரிகள்’ எனும் புத்தகத்தில் இருந்தது பற்றியும் அந்த கூட்டத்தில் பேசினேன்.

ராஜராஜசோழனின் ஆட்சிக்காலம் ஒடுக்கப்பட்ட மக்களின் கற்காலம் என சில ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களைத்தான் குறிப்பிட்டேன். உள்நோக்கத்துடன் எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை. மேலும் எனது கருத்து எந்த சமூகத்திற்கும் எதிராக அமையவில்லை. என் மீது அளிக்கப்பட்ட புகாரின்பேரில் தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ‘‘ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு ராஜராஜசோழன் குறித்து விமர்சனம் செய்தது ஏன்?’’ என்று கேள்வி எழுப்பி இருந்தது. மேலும் டைரக்டர் பா.ரஞ்சித் மீதான வழக்கு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய போலீசாருக்கும் உத்தரவிட்டது.

ஆனால், அவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று மதுரை அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் எஸ்.முத்துக்குமார் சார்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருந்தது.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, “பல்வேறு குறிப்புகளின் அடிப்படையில் தான் மனுதாரர் பேசியுள்ளார். இதனால் எந்தவித சட்டம்–ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படவில்லை. எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்“ என்று வாதாடினார்.

அப்போது முத்துக்குமார் சார்பில் ஆஜரான வக்கீல்கள் நீலமேகம், முகமது ரஸ்வி ஆகியோர், “மனுதாரரை போல சட்டம்–ஒழுங்கு பிரச்சினை, சாதி, மத மோதல்களை ஏற்படுத்தும் விதமாக பலரும் பேசுவது அதிகரித்து வருகிறது. அனைவரும் போற்றும் ராஜராஜசோழன் ஆட்சிக்காலத்தில் சாதிய நடவடிக்கைகள் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடையாது. ஆதாரமின்றி மனுதாரர் பல்வேறு கருத்துகளை பேசியுள்ளார். எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்கினால் மற்றவர்களும் அவரை போல பேச வாய்ப்புள்ளது. எனவே மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது“ என்று வாதாடினார்கள்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “எதிர்காலத்தில் சர்ச்சைக்குரிய வகையில் மனுதாரர் பேசக்கூடாது. மீறி அவர் இதுபோல பேசினால் அவருக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி சம்பந்தப்பட்ட மாவட்ட கோர்ட்டை அணுகலாம்“ என்று நீதிபதி அறிவுறுத்தினார்.

மேலும், “மனுதாரரை காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது“ என்று நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story