ராஜா வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தம்: வெற்றிலை பயிர் கருகும் அபாயம் உடனடியாக தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை


ராஜா வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தம்: வெற்றிலை பயிர் கருகும் அபாயம் உடனடியாக தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 25 Jun 2019 10:30 PM GMT (Updated: 25 Jun 2019 9:43 PM GMT)

ஜேடர்பாளையம் படுகை அணையில் இருந்து முன்னறிவிப்பின்றி ராஜா வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டதால் காய்ந்து போகும் நிலையில் உள்ள வெற்றிலை பயிர்களை காக்க உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பரமத்திவேலூர்,

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் படுகையணையில் இருந்து ராஜா வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த ராஜா வாய்க்கால் மூலம், நன்செய் இடையாறில் இருந்து கொமராபாளையம், பொய்யேரி மற்றும் மோகனூர் ஆகிய வாய்க்கால்களுக்கு தண்ணீர் பிரிக்கப்பட்டு மோகனூர் அருகே உள்ள ஒருவந்தூர் வரை செல்கிறது.

இந்த வாய்க்கால் பாசனத்தை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நன்செய் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. ஆண்டில் 15 நாள் வாய்க்கால் பராமரிப்புக்காக ராஜா வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்படுவது வழக்கம்.

தற்போது முன்னறிவிப்பு இல்லாமல் ராஜா வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் பணப்பயிர்களான வாழை, வெற்றிலை, கரும்பு, கோரை மற்றும் நெல் உள்ளிட்ட பயிர்கள் கருகும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. காவிரி ஆற்றில் குடிநீர் பயன்பாட்டிற்கு மட்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் நேரடியாக காவிரி ஆற்றில் இருந்தும் நீரேற்று பாசன சங்கத்தினர் பம்பு செட்டுகளை இயக்கி தண்ணீர் எடுக்கக்கூடாது.

விவசாயிகள் கோரிக்கை

ஆனால் தற்போது காவிரி ஆற்றில் இருந்து முறைகேடாக நீரேற்று பம்பு செட்டுகளுக்கும், புகளூர் காகித ஆலைக்கும் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். குறிப்பாக வாழை மற்றும் வெற்றிலை பயிர்கள் கருகும் அபாயத்தால் அந்த பயிர்களை காப்பாற்ற ராஜா வாய்க்காலில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய நிலையில் ராஜா வாய்க்காலில் தண்ணீர் வரத்து இல்லாததால் ஆங்காங்கே வாய்க்காலில் சாக்கடை கழிவுநீர் தேங்கி உள்ளது.

இதையடுத்து ராஜா வாய்க்காலில் தண்ணீர் திறப்பது குறித்து விவசாயிகளுடனான ஆலோசனை கூட்டம் கடந்த வாரம் பரமத்திவேலூர் பொதுப்பணித்துறை பிரிவு அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட பொதுப்பணித்துறை சரபங்கா கோட்ட செயற்பொறியாளர் கவுதமன் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி மராமத்து பணிகளை தற்காலிகமாக நிறுத்தி ராஜா வாய்க்காலில் உரிய தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என செயற்பொறியாளர் கவுதமன் உறுதி அளித்திருந்தார். ஆனால் 5 நாட்கள் ஆகியும் இதுவரை தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளது.

கடுமையான நடவடிக்கை

இது குறித்து பரமத்திவேலூர் பொதுப்பணித்துறையினரிடம் கேட்டபோது கூறியதாவது:-

ராஜா வாய்க்காலில் தண்ணீர் திறப்பதற்கு உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தண்ணீர் திறப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குடிநீருக்காக மட்டும் காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை நீரேற்று பாசன சங்கத்தினர் மோட்டார் மூலம் எடுத்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story